பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். என்று பாஜக தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா எம்.பி., தெரிவித்துள்ளார்.
சிந்தனையாளர் பிரிவு கலந்துரையாடல் கூட்டம் நேற்று (ஏப்ரல் 12) சென்னை வேப்பேரியில் நடைபெற்றது. இதில், பாஜக தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா கலந்து கொண்டு கலந்துரையாடினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் அரசியல் மாற்றத்துக்கு தயாராகி வருகிறது. பாஜக தொண்டர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் புத்துணர்ச்சியுடன் உள்ளனர். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கு மாற்றாக பாஜக தமிழகத்தில் வளர்ச்சி கண்டுள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில், தமிழக மக்கள் யாருக்கு வாக்களிக்க உள்ளனர் என்பதை இந்தியா மட்டுமல்லாது உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
இந்த தேர்தலில், தமிழகத்தில் பாஜக 25 சதவீத வாக்குகளை நிச்சயம் பெறும். கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறும். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக ஆட்சி அமைப்பார். நிச்சயம், பாஜக தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். வருகிற ஜூன் 4-ம் தேதி அதை அனைவரும் உணர்வார்கள்’’ இவ்வாறு அவர் கூறினார்.