பாஜக மட்டும் தான் தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
மதுரை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசனை ஆதரித்து கீழமாசி வீதி சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் (ஏப்ரல் 12) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாகனப் பேரணி மேற்கொண்டார். அப்போது பாஜக தொண்டர்கள் வழி முழுவதும் திரண்டிருந்து முழக்கங்கள் எழுப்பியவாறு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வாகனத்தில் இருந்தவாறு பேசிய அமித் ஷா, அதிமுக, திமுக கட்சிகளின் ஊழல் காரணத்தால் தான் தமிழ்நாடு வளர்ச்சி பெறவில்லை என்று குற்றம் சாட்டினார். அதேவேளையில், தமிழ்நாட்டின் கவுரவத்தை உலகம் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் உள்ள அதிமுக, திமுக என இரு கட்சிகளும் ஊழல் கட்சிகள். மக்கள் இதனை புரிந்து கொள்ளத் துவங்கியுள்ளார். பாஜகவை ஒரு வாய்ப்பாக மக்கள் பார்க்கின்றனர். இங்கு நடைபெறும் வாகன பேரணி நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் பிரதமர் நரேந்திர மோடிக்காகவும், மாநில தலைவர் அண்ணாமலைக்காகவும் வந்துள்ளனர்.
தமிழ்நாட்டை ஊழலின் மூலம் அதிமுகவும் திமுகவும் மாறி மாறி சீரழித்துவிட்டன. அந்த ஊழலிருந்து விடுபட, தமிழ் பெருமையை தேசிய அளவில் எடுத்துச் செல்ல மோடி மீண்டும் வெற்றி பெற வேண்டும். அதற்கு தாமரை பட்டனை மக்கள் அழுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.