3 ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் தமிழில் பேசுவேன்: கன்னியாகுமரியில் அமித்ஷா!

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நந்தினி ஆகியோரை ஆதரித்து கன்னியாகுமரியில் மத்திய உள்துறை அமைச்சர் இன்று (ஏப்ரல் 13) பிரசாரத்தில் ஈடுபட்டார். அதன் ஒரு பகுதியாக தக்கலை பகுதியில் நடைபெற்ற வாகன பேரணியில் அமித்ஷா பங்கேற்றார்.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த பேரணியில், சாலையின் இருபுறங்களிலும் லட்சக்கணக்கான பா.ஜ.க. தொண்டர்கள், பொதுமக்கள் குழுமி அமித்ஷாவை மலர் தூவி வரவேற்றனர்.

அப்போது வாகனத்தில் இருந்தவாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது;

‘‘தமிழ் பண்பாடு, மரியாதையை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளார். தமிழ் மொழியில் உங்கள் முன் பேச முடியவில்லை என வருத்தமாக உள்ளது. ஆனால் 3 ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் தமிழில் பேசுவேன்.

தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை புறக்கணித்து பா.ஜ.க.வை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அயோத்தி ராமர் கோவில், சனாதன தர்மம் ஆகியவற்றை அவதூறாக பேசி தி.மு.க. இந்துக்கள் மனதைக் காயப்படுத்தியது. பா.ஜ.க. வெல்லும் 400 இடங்களில் பொன்.ராதாகிருஷ்ணனுடையதும் ஒன்றாக இருக்க வேண்டும்.’’

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

அமித்ஷாவின் பேச்சைக் கேட்டு மக்கள் கைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விரைவில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜகவின் வசம் வருவது மட்டும் உண்மை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top