‘‘மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைந்ததும் ஊழல்வாதிகளின் சொத்துகளை பறித்து ஏழை மக்களுக்கு வழங்குவோம்’’ என கேரளாவில் இன்று (ஏப்ரல் 15) நடந்த பிரசாரக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
நேற்று மலையாள புத்தாண்டு தினமான விஷூ பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நல்ல நேரத்தில் கேரள மக்களின் ஆசிர்வாதங்களைப் பெற்றுள்ளேன். நேற்று (ஏப்ரல் 14) பா.ஜ.க., தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
பா.ஜ.க.,வின் தேர்தல் அறிக்கை என்றால் மோடியின் உத்தரவாதம். மோடியின் உத்தரவாதத்தின் கீழ் இந்தியா உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மையமாக மாறும், விண்வெளித் துறையில் ககன்யான் போன்ற மறக்க முடியாத சாதனைகளை இந்தியா படைக்கும், விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் சம்மான் நிதி தொடர்ந்து கிடைக்கும்.
அதுமட்டுமல்லாமல் ஏழைகளுக்கு 3 கோடி புதிய வீடுகளும் கட்டப்படும், 70 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். சுயஉதவி குழுக்களுடன் தொடர்புடைய சுமார் 10 கோடி பெண்களுக்கு தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், சுற்றுலா மற்றும் சில்லறை வணிகம் ஆகிய துறைகளில் பயிற்சி அளிக்கப்படும். ஊழல்வாதிகளின் சொத்துகளை பறிமுதல் செய்து ஏழை மக்களுக்கு வழங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.