இரண்டு திராவிட கட்சிகளுக்கு வாக்களித்து ஏமாந்தது போதும்.. தலைவர் அண்ணாமலை!

தமிழகத்தில், இத்தனை ஆண்டுகளாக, இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றி மாற்றி வாக்களித்து, ஏமாற்றம் அடைந்ததுதான் மக்கள் அடைந்த பலன் என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி, பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் நேற்று (ஏப்ரல் 15) கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான மத்திய அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய தலைவர் அண்ணாமலை;

தேசிய ஜனநாயகக் கூட்டணியில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வலிமையான தலைவராக இருக்கிறார். ஆனால், இன்டி கூட்டணி அமைத்து எட்டு மாதங்கள் கடந்தும், பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியவில்லை. தேர்தலுக்குப் பிறகு, தாங்கள் சொல்வதைக் கேட்டு நடக்கும் ஒருவரை நியமிக்கும் எண்ணத்தோடு இருக்கிறார்கள். நாடு முழுவதும், 98 கோடி மக்கள் வாக்களித்து பிரதமரைத் தேர்ந்தெடுக்கவிருக்கும் தேர்தல் இது. பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி தான் மீண்டும் நமது பிரதமர் என்பதை மக்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள்.

ஏழை எளிய மக்கள், விவசாயிகள், இளைஞர்கள், தாய்மார்கள் என சாமானிய மக்களுக்காக, பத்து ஆண்டுகள் ஆட்சி செய்த, நமது பிரதமர் அவர்கள், நாடு முழுவதும், வீடு இல்லாத நான்கு கோடி மக்களுக்கு, வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளில், மேலும் மூன்று கோடி மக்களுக்கு, வீடுகள் கட்டிக் கொடுப்பேன் என்று உறுதி அளித்திருக்கிறார்.

மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கும் போது, அவரைப் பயன்படுத்தி, நமது தொகுதி எப்படி வளர்ச்சி பெறுவது என்று சிந்திப்பதே, நமது தொகுதியின் வளர்ச்சிக்கு உதவும்.

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய நாடுகள், தங்கள் நாட்டின் உயரிய விருதுகளை, நமது பிரதமர் மோடிக்கு அளித்து கௌரவப்படுத்தியுள்ளன. இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு வழங்கியது நமது பிரதமர் மோடி அவர்கள்தான். ஆனால், சிறுபான்மை மக்களின் நண்பன் என்று சொல்லிக் கொள்ளும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, அமரர் அப்துல் கலாம், இரண்டாவது முறையாக ஜனாதிபதி ஆகும் வாய்ப்பை எதிர்த்தார். இதுதான் திமுகவின் உண்மை குணம்.

எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்பதற்காக, கல்விக்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி என்று போலி வாக்குறுதி கொடுத்து, பொதுமக்களைச் சிக்கலில் தள்ளியதுதான் திமுகவின் சாதனை. எளிய மக்களைப் பாதிக்கும் மது விற்பனை மூலம் வருடத்திற்கு ரூ.50,000 கோடி வருமானம் ஈட்டுகிறார்கள். அந்த பணம் மது ஆலைகள் நடத்தும் திமுகவினருக்குச் செல்கிறது. ஆனால், தமிழகம், கடன்கார மாநிலமாக மாறியிருக்கிறது.

2026 ஆம் ஆண்டு, தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும்படி, கள்ளுக்கடைகள் திறக்கப்படுவது உறுதி. 50 ஆண்டுகளாக பணத்தைக் கொடுத்து வாக்குகள் பெற வேண்டிய நிலையில்தான் திராவிட அரசியல் இருக்கிறது. பணம் கொடுத்து அதிகாரத்துக்கு வந்து, பின்னர் மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் திமுகவினர் பணப்பேய்களாக இருக்கிறார்கள். வாக்குகளுக்குப் பணம் கொடுக்கும் திமுக, மக்களிடமிருந்து திருடிய பணத்தைத்தான் கொடுக்கிறது என்பதை, மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.

பல்லடம் சட்டமன்றத் தொகுதி பகுதிகளில், வக்பு வாரியம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். சோமனூரில் ஜவுளிச்சந்தை, சூரிய ஒளி மின் தகடுகள் அமைக்க மானியம் என, கைத்தறி, விசைத்தறித் தொழில்களை மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தமிழகத்தில், இத்தனை ஆண்டுகளாக, இரண்டு கட்சிகளுக்கும் மாற்றி மாற்றி வாக்களித்து, ஏமாற்றம் அடைந்ததுதான் மக்கள் அடைந்த பலன். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதைப் பொருள் விற்பனை, வாரிசு அரசியல், ஊழல் என இவற்றைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே தவிர, வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல இரண்டு திராவிடக் கட்சிகளும் முன்வரவில்லை.

இந்த முறை, நாம் அதனை மாற்றிக் காட்டுவோம். வளர்ச்சி, உட்கட்டமைப்பு மேம்பாடு, தண்ணீர் பற்றாக்குறைக்குத் தீர்வு, தரமான சாலைகள் என அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவோம். கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்குக் கொடுக்கப்பட்ட 100 வாக்குறுதிகளையும், அடுத்த 500 நாட்களுக்குள் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று உறுதி அளிக்கிறேன்.

நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் பாராளுமன்றத் தேர்தலில், 400 இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கும்போது, அவரது மக்கள் நலத் திட்டங்களை, முழுமையாகச் செயல்படுத்தி, நமது கோவை வளர்ச்சி பெற்றிட, உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் அன்புத் தம்பி அண்ணாமலையாகிய எனக்கு, கட்சி வேறுபாடின்றி, தாமரை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top