தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த தேர்தல் பிரச்சாரம் நேற்று (ஏப்ரல் 17) மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. கடைசி நாளில் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள 21 மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் பிரசாரம் நேற்றுடன் நிறைவு பெற்றது.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை (ஏப்ரல் 19) நடைபெறவுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு கடந்த மார்ச் 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
தேர்தல் அட்டவணைப்படி, தமிழகத்தில் முதல் கட்டத்தில் அதாவது ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தேசிய கட்சியான பாஜக, போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் தமிழகத்தில் பிரசாரம் செய்தனர்.
பிரசார மேடைகள் மட்டுமின்றி, சாலைகளில் வாகனப் பேரணியும் நடைபெற்றது. பாஜகவின் தேசியத் தலைவர்கள் நடத்திய இந்தப் பேரணிகள் தமிழகத்துக்கு புதியது என்றாலும் அனைத்து இடங்களிலும் அவர்களது கட்சியினர் திரண்டு வந்து அமோக ஆதரவளித்தனர்.
6 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பிரச்சாரம் செய்ய வந்த வெளி நபர்கள் வெளியேறவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தங்கும் விடுதிகள், திருமண மண்டபம், சமுதாயக் கூடம் உள்ளிட்டவற்றில் தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. நாளை மறுநாள் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.