இந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்த நிலையில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 26) இரண்டாம் கட்டத் தேர்தல் நடக்கிறது. அந்த வகையில் கேரளா (20 தொகுதிகள்), கர்நாடகா (14), ராஜஸ்தான் (13), மகாராஷ்டிரா (8), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), பீகார் (5), சத்தீஷ்கார் (3), மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (1), திரிபுரா (1), காஷ்மீர் (1) போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் இளம் வாக்காளர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் ஆங்கிலம், இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ‘‘இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள அனைவரையும் சாதனை எண்ணிக்கையில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதிக வாக்குப்பதிவு நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது. குறிப்பாக இளம் வாக்காளர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் வாக்கு உங்கள் குரல்!’’ என்று தெரிவித்து உள்ளார்.