திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்து ஒன்றில் சீன மொழியில் ஒளிர்ந்த பெயர்ப் பலகையால் பேருந்து எந்த ஊருக்கு செல்கிறது என அறிய முடியாமல் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு தினமும் ஏராளமான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகை புரிவது வழக்கம்.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட TN 57 N 2410 என்ற அரசு பேருந்தில் திண்டுக்கலில் இருந்து பொள்ளாச்சி செல்லும் அரசு பேருந்து என்று இடம் பெற்றிருக்கும் மின்னணு பெயர் பலகையில் சீன மொழி இடம் பெற்று பேருந்து நிலையத்திற்கு வந்தது.
அந்த அரசு பேருந்து சீன மொழியிலேயே பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்றதால் பேருந்தில் ஏற இருந்த பயணிகளும், காத்திருந்த பயணிகளும் தமிழ் சொற்களுக்கு பதிலாக சீன மொழி இடம்பெற்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஹிந்தி மொழிக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக தற்போது சீன மொழியுடன் அரசு பேருந்தை இயக்கி வருகிறது.
ஏற்கனவே சீனா ராக்கெட் படத்தை திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளம்பரமாக வெளியிட்டு தமிழர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தார். தற்போது திராவிட மாடல் அரசு பேருந்தில் சீனா மொழியிலேயே பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியை விட சீன மொழி திமுகவினருக்கு முக்கியமாக போய்விட்டதா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.