மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசமைப்பு மாற்றப்படும் என்பது போன்ற பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு பொதுமக்கள் மத்தியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி வருவதாக காங்கிரஸ் மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் நேற்று (மே 02) புகார் அளிக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் பாரதிய ஜனதா கட்சி வெல்லும் என்ற முழக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அரசமைப்பை மாற்றியமைக்கவும் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவும் பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது என காங்கிரஸ் பொய்யான தகவலை பரப்பி வருகிறது.
இதுபோன்ற பொய்யான பிரசாரங்களை இ.ண்.டி. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் ‘டீப்ஃபேக்’ காணொலிகளை வெளியிட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பான மனுவை மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் நேற்று (மே 02) புகார் மனு அளித்தனர்.
பின்னர் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மக்களவைத் தேர்தல் சுதந்திரமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறுவதை தடுக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதை தேர்தல் ஆணையத்திடம் சுட்டிக்காட்டியுள்ளோம்.
எனவே, பொய்களை மட்டும் கூறும் காங்கிரஸுக்கு எதிராக தேர்தல் ஆணையம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் போலி காணொலியில், அனைத்து சமூகத்தினரின் இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என கூறுவதுபோல் இருந்தது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்திய இணைய குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் சார்பில் டெல்லி காவல்துறையிடம் புகாரளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த போலி காணொலியைப் பகிர்ந்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்குர் உள்ளிட்டோருக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பினர்.