மல்லிகார்ஜுன கார்கே பொய்கள் கூறுவதை நிறுத்தவேண்டும். நான் இடஒதுக்கீட்டை நீக்கவேண்டும் என்று கூறியதாக போலி வீடியோவை பரப்பி விட்டதே அவர்கள்தான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
பட்டியல் இனத்தவர்களான எஸ்சி, பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) வழங்கப்படும் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுவது போன்ற போலி வீடியோவை காங்கிரஸ் கட்சியினர் இணையத்தில் பரப்பினர்.
இந்த போலி வீடியோ தொடர்பாக டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியது போன்று வீடியோ வெளியிட்டவர்கள் மீது மத்திய உள்துறை அமைச்சகம் புகார் அளித்தது.
இந்த நிலையில் அதற்குப் பதிலளிக்கும் விதமாக சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்திலுள்ள கத்கோரா நகரில் (மே 01) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:
இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் கட்சியினர் அளவுக்கு அதிகமாக பொய்களைப் பேசி வருகின்றனர். பொய்களை சத்தமாகவும், வெளிப்படையாகவும், திரும்பத் திரும்பத் கூறுவதை கொள்கையாக காங்கிரஸ் தலைவர்கள் கொண்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பொய்கள் கூறுவதை நிறுத்தவேண்டும். நான் இடஒதுக்கீட்டை நீக்கவேண்டும் என்று கூறியதாக போலி வீடியோவை பரப்பி விட்டதே அவர்கள்தான்.
எஸ்சி, எஸ்டி, ஓபிசியினரின் இடஒதுக்கீட்டை நீக்கும் செயலில் பாஜக எப்போதும் ஈடுபடாது. அதே நேரத்தில் இடஒதுக்கீட்டை நீக்குவதற்கு காங்கிரஸ் முயன்றாலும் அதைத் தடுக்கும்.
இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். பிரதமர் மோடி 3-வது முறையாக தொடர்ச்சியாக பதவியில் அமர்வார்.
கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருக்கிறோம். அப்போது ஒரு முறை கூட இடஒதுக்கீட்டை நீக்குவதாக பிரதமர் மோடி கூறவில்லை. அதை அவர் செய்யவும் மாட்டார்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு, முத்தலாக் சட்டம் போன்றவற்றை நீக்கினார் பிரதமர் மோடி. ராமருக்காக 500 ஆண்டுகள் காத்துக் கிடந்த மக்களுக்காக ராமர் கோயிலை கட்டித் திறந்தார். நாட்டு குடிமக்கள் நலனுக்காக குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) கொண்டு வந்தார். இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி என்றுமே நீக்கமாட்டார். இது பிரதமர் மோடியின் உத்தரவாதம். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.