சென்னை மடிப்பாக்கம், ராம்நகர் தெற்கு 11வது பிரதான சாலையில் அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருபவர் ஆந்திராவை சேர்ந்த மண்ணு ரமணய்யா (74). 14 வீடுகள் கொண்ட குடியிருப்பை, கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து கட்டி வருகிறார்.
தற்போது பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால், 188வது வார்டு திமுக கவுன்சிலர் சமீனா செல்வம் என்பவரின் ஆதரவாளர்களான திமுக பிரமுகர்கள் விமல் என பெயர் கொண்ட இருவர் ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
ஏற்கெனவே இருமுறை மிரட்டிச் சென்ற அந்நபர்கள் நேற்று (மே 02) சென்று பணம் கொடுக்கச் சொல்லி மிரட்டி முதியவரை கன்னத்தில் தாக்கியுள்ளனர். ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட முதியவர் இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் திமுக பிரமுகர்கள் மீது முதியவர் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திமுக ஆட்சியில், ரவுடிசம், கட்டப்பஞ்சாயத்து, போதை கலாச்சாரம் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. தற்போதைய திமுக ஆட்சியில் சாமானிய மனிதர்களை கூட அக்கட்சியினர் மிரட்டி மாமூல் வசூலித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.