குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது குடும்பத்தினருடன் இன்று (மே 07) வாக்களித்தார்.
காந்தி நகர் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்டியிடுகிறார்.
இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் குடும்பத்தினருடன் அவர் வாக்களித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடும் வெயிலையும் கருதாமல் பொதுமக்கள் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர். இந்த ஜனநாயக திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும். தான் வாக்களித்த போது நாட்டு மக்களின் நலன் குறித்து சிந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, பொதுமக்கள் நலன் குறித்து நடவடிக்கை எடுக்கும் அரசாங்கத்தை வாக்காளர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.