பாரதிய ஜனதா கட்சி முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த இஸ்லாமிய பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து சூரத் காவல் ஆணையர் அனுபம் சிங் கெலாட் கூறியதாவது:
பாஜகவின் நுபுர் சர்மாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த மவுல்வி சோஹெல் அபுபக்கர் திமோல் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அவர் இஸ்லாமிய குழந்தைகளுக்கு கல்வி போதிக்கும் ஆசிரியர் பணியை மேற்கொண்டு வந்த மவுல்வி என்பது தெரியவந்தது. இந்து அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களை கொல்ல திமோல் திட்டம் தீட்டி வந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
இவர் முன்பு நூற்பாலையில் பணிபுரிந்த போது பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த தனது கூட்டாளிகளுடன் இணைந்து சுதர்சன் தொலைக்காட்சி சேனலின் தலைமை ஆசிரியர் சுரேஷ் சாவங்கி மற்றும் பாஜகவின் தெலங்கானா எம்.எல்.ஏ., ராஜா சிங் உள்ளிட்டோருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்காக அவரது கூட்டாளிகளுக்கு ஒரு கோடி வரை கொடுக்கவும் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், சனாதன சங்க தேசிய தலைவர் உபதேஷ் ராணாவை தீர்த்துக் கட்ட சதி செய்ததும் கண்டறியப்பட்டுள்ளது. அவரது செல்போனில் இருந்து ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம். அதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கெலாட் கூறியுள்ளார்.