காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளிடம் ரூ.134 கோடி பணம் வாங்கிய விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலிடம் என்ஐஏ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு சீக்கியருக்கான நீதி அமைப்பு செயல்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டில் இந்த காலிஸ்தான் அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்து, பயங்கரவாத குழுக்கள் பட்டியலில் சேர்த்தது.
கடந்த மார்ச் மாதம் சீக்கியருக்கான நீதி அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் கூறும்போது, “2014 முதல் 2022 வரையிலான காலத்தில் எங்கள் தரப்பில் கெஜ்ரிவாலுக்கு ரூ.134 கோடி வழங்கப்பட்டது’’ என்று தெரிவித்தார்.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால், தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த சூழலில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளிடம் ரூ.134கோடி பெற்ற விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவாலிடம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்த டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக செயலாளருக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார்.
விரைவில் கெஜ்ரிவாலிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பயங்கரவாதிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ஊழலுக்கு எதிராக போராடுவதாக பொய்யான பிம்பத்தை ஆம் ஆத்மி கட்டமைத்திருப்பது மக்கள் முன்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.