தேவர்குளம் மக்கள் மீது பொய்வழக்கு: டிடிவி தினகரன் கண்டனம்!

திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம், வன்னிகோனேந்தல் பகுதிகளைச் சேர்ந்த ஒன்பது கிராம மக்கள் மீது ஒருதலைபட்சமாக பொய்வழக்குகளை பதிவு செய்ததாக தேவர்குளம் காவல்நிலையத்தை கண்டித்து போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மீது தடியடி நடத்தியிருக்கும் காவல்துறையின் இரக்கமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொய்வழக்குகள் பதிவு செய்வதாக தேவர்குளம் காவல்நிலைய காவலர்கள் மீது பொதுமக்கள் புகார் . அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்த பொதுமக்களின் மீது நடத்தப்பட்டிருக்கும் தடியடி கடும் கண்டனத்திற்குரியது.  

திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம், வன்னிகோனேந்தல் பகுதிகளைச் சேர்ந்த ஒன்பது கிராமப் பொதுமக்கள் மீது  ஒருதலைபட்சமாக பொய்வழக்குகளை பதிவு செய்வதாக தேவர்குளம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் மீது தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன.  

இந்நிலையில், பொய்வழக்குகளை பதிவு செய்யும் தேவர்குளம் காவல்நிலையத்தை கண்டிக்கும் வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் இசக்கிராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மீது தடியடி நடத்தியிருக்கும் காவல்துறையின் இரக்கமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது

பொதுமக்களின் புகார்களை விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, எவ்வித காரணமும் இல்லாமல் பொதுமக்கள் மீது பொய்வழக்குகளை பதிவு செய்வதும், அறவழியில் போராடியவர்கள் மீது அடக்குமுறையை கையாண்டு, தடியடி நடத்தியிருப்பதும் உச்சபட்ச அராஜகம்.

எனவே, பொதுமக்கள் மீது பொய்வழக்குகளை பதிவு செய்வதாக தேவர்குளம் காவல்நிலைய காவலர்கள் மீது எழுந்துள்ள புகார்களை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அப்பகுதி மக்கள் மீது பதியப்பட்ட பொய்வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் காவல்துறை மற்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top