காங்கிரஸ் 50 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது: ஒடிசாவில் பிரதமர் மோடி!

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 50 தொகுதிகளில் கூட வெற்றிபெறாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

ஒடிசா மாநிலம் கந்தமாலில் இன்று (மே 11) நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களை தாண்டும் என்று நாடு முடிவு செய்து விட்டது. எதிர்க்கட்சியாக இருப்பதற்குத் தேவையான இடங்களை காங்கிரஸ் பெற மாட்டார்கள் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்பதை காங்கிரசார் எழுதி வைத்து கொள்ளுங்கள்.

காங்கிரஸ் 50 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது. தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறாது. காங்கிரஸ் மீண்டும் மீண்டும் தனது சொந்த நாட்டை பயமுறுத்த முயற்சிக்கிறது. பாகிஸ்தானிடம் மென்மையாக நடந்து கொள்கிறது. பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருக்கிறது. கவனமாக இருங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகிறார்.

அவர்கள் பாகிஸ்தானின் வெடிகுண்டு பற்றி பேசுகிறார்கள். ஆனால் பாகிஸ்தானின் நிலையை பார்த்தால் அதை எப்படி வைத்திருப்பது என்று தெரியாமல், தங்கள் வெடிகுண்டுகளை விற்க ஆட்களை தேடுகிறார்கள்.

ஆனால் தரம் பற்றி மக்களுக்குத் தெரியும் என்பதால் யாரும் அவற்றை வாங்க விரும்பவில்லை. மும்பை தாக்குதலுக்கு காங்கிரஸ் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.

26 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வாஜ்பாய் அரசால் நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனையானது, உலகம் முழுவதும் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதன் மூலம் மக்களின் 500 ஆண்டுகால காத்திருப்புக்கு பாஜக முடிவு கட்டியது. ஒடிசாவில் முதன்முறையாக இரட்டை என்ஜின் ஆட்சி அமைக்கப்படும். ஒடியா மொழி, கலாச்சாரம் தெரிந்த மண்ணின் மகனோ அல்லது மகளோ ஒடிசாவில் பாஜக அரசின் முதல்வராக வருவார்.

ஒடிசா முதல்வராக இருக்கும் நவீன் பட் நாயக்குக்கு சவால் விட விரும்புகிறேன். ஒடிசா மாவட்டங்கள் மற்றும் அந்தந்த தலைநகரங்களை காகிதத்தில் பார்க்காமல் அவரை எழுத சொல்லுங்கள். மாநிலத்தின் மாவட்டங்களின் பெயரை முதல்வர் சொல்ல முடியாவிட்டால், உங்களது வலி அவருக்கு எப்படி தெரியும்?.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top