காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவர் சாம் பிட்ரோடா, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்திய மக்களை சீனர்கள், ஆப்பிரிக்கர்கள் என்று ஒப்பிட்டு பேசினார். இவரது பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சாம் பிட்ரோடாவின் நிறவெறிப் பேச்சை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (மே 13) பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்காததால், வள்ளுவர் கோட்டம் வந்த பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து பாஜக மாநிலதுணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ ராஜலட்சுமி, மாநில செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட தலைவர்கள் விஜய் ஆனந்த், காளிதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள லேக் ஏரியா பகுதியில் திரண்டனர். திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியை கண்டிக்க விடாமல் சர்வாதிகரமாக செயல்பட்டு பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது, கரு.நாகராஜன் கூறுகையில், ‘`ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸார் எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. விரைவில் நீதிமன்றம் சென்று, இதே வள்ளுவர் கோட்டத்தில் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்’’ என்றார்.