பீகார் முன்னாள் துணை முதல்வரும் பா.ஜ.க., மூத்த தலைவருமான சுஷில்குமார் மோடி (72), டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் நேற்று (மே 13) காலமானார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
1952-ம் ஆண்டு பிறந்த சுஷில்குமார் மோடி மூன்று தசாப்தங்களாக அரசியல் களத்தில் இருந்தவர். கடந்த 2005 முதல் 2013 வரை மற்றும் 2017 முதல் 2020 வரை பீகார் துணை முதல்வரும், நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார். இதுதவிர எம்.எல்.ஏ., எம்.எல்.சி., மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி ஆகவும் பதவி வகித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் தனக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்ததை அடுத்து, 2024 மக்களவை தேர்தலில் இருந்து விலகுவதாக சுஷில் குமார் மோடி சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுஷில்குமார் மோடி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று (மே 14) பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டது. சுஷில்குமார் மோடி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பல தசாப்தங்களாக எனது நண்பராக இருந்தவரான சுஷில் மோடியின் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் பா.ஜ.க.வின் எழுச்சி மற்றும் வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்து, மாணவர் அரசியலில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கினார். அரசியல் தொடர்பான விஷயங்களை ஆழமாகப் புரிந்துகொண்டவர். ஜி.எஸ்.டி.யை நிறைவேற்றுவதில் அவர் ஆற்றிய பங்கு எப்போதும் நினைவுகூரப்படும். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.