தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோருடன் சென்று பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 14) வாரணாசி மக்களவைத் தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்தார்.
7 கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் 4 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக பிரசாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். 3-வது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, இதில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியமைக்க உள்ளார்.
இந்த நிலையில், வாரணாசி ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அபிஜித் முகூர்த்தம் என்ற அரிதான முகூர்த்தத்தில் பிரதமர் வேட்புமனு தாக்கல் செய்தார். பிரதமரின் வேட்புமனுவை 4 பேர் முன்மொழிந்து கையெழுத்திட்டனர். அப்போது பிரதமருடன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மேலும், தமிழகத்தில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களான அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், தேவநாதன் யாதவ் உட்பட பலர் பங்கேற்றனர்.
வருகிற ஜூன் 1-ம் தேதி, 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலின்போது வாரணாசி தொகுதிக்கான வாக்கு பதிவானது நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.