குடியுரிமை திருத்தச்சட்டம் (சிஏஏ) குறித்து பொய்களை பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி முயற்சி செய்தன என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டத்தில் இன்று (மே 16) நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக இந்தியா வந்துள்ளவர்களுக்கு குடியுரிமை வழங்கும் பணி துவங்கிவிட்டது. இவர்கள் நாட்டில் நீண்ட காலமாக அகதிகளாக வாழ்ந்து பாதிக்கப்பட்டவர்கள். அதே நேரத்தில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியும், காங்கிரசும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பொய்களைப் பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயன்றன.
எனது உத்தரவாதத்தின் மீது இந்திய மக்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை உலகமே கண்காணித்து வருகிறது. இண்டி கூட்டணியினர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அகற்றுவோம் எனக் கூறி வருகின்றனர். இதை யாராலும் அகற்ற முடியாது. அவர்கள் ஒரு ஏமாற்றுக்காரர்கள். அண்டை நாடுகளில் வாழும் சிறுபான்மையினர் இந்தியாவுக்கு வருமாறு மகாத்மா காந்தியே கூறியுள்ளார்.
கடந்த 70 ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களின் கலாசாரம் மற்றும் மதத்தைப் பாதுகாக்க இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்கள் காங்கிரசின் ஓட்டு வங்கியாக இல்லாததால், அவர்களைப் பற்றி காங்கிரஸ் கவலைப்படவில்லை. மதத்தின் அடிப்படையில் நாட்டை காங்கிரஸ் பிரிக்க முயற்சி செய்கிறது. அகதிகளை காங்கிரஸ் புறக்கணிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.