தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் மீண்டும் தலையெடுத்து உள்ளதாக முன்னாள் தெலுங்கானா ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தென் சென்னை மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நீர் மோர் பந்தல்களை, அத்தொகுதி பாஜக வேட்பாளரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தர ராஜன் நேற்று (மே 16) திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சென்னையில் பெய்துவரும் மழையில் சூரியன் மறைந்திருக்கிறது. மழை பெய்தால் குளங்கள் நிரம்பும். தாமரை மலரும். அந்தவகையில் எனக்கு மகிழ்ச்சிதான். தமிழகத்தில் நாம் நினைப்பதை விட போதைப்பொருள் நடமாட்டம் மிக அதிகமாக இருந்து வருகிறது. இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
முன்பெல்லாம் பேருந்துகளில் மக்கள் மட்டுமே பயணித்து கொண்டிருந்தனர். ஆனால் இன்றைக்கு பேருந்து இருக்கைக்கு அடியில் கத்தி, அரிவாள், துப்பாக்கி போன்றவையும் சேர்ந்து பயணம் செய்கின்றன. அந்தவகையில் மோசமான கூலிப்படை கலாச்சாரம் தமிழகத்தில் மீண்டும் தலையெடுத்து இருக்கிறது. கொலை, கொள்ளை, திருட்டுகள் அதிகரித்துள்ளன. இதற்கு எல்லாம் மாநில அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
அதேபோல சனாதனத்தை டெங்குவை போல ஒழிப்போம் என்றனர். ஆனால் இன்றைக்கு டெங்குவையே ஒழிக்க முடியாமல், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்து காணப்படுகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
நலம் சார்ந்த தண்ணீரை குடித்துக் கொண்டிருந்த மக்கள், மலம் சார்ந்த தண்ணீரை குடித்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவையெல்லாம் திமுகவின் 3 ஆண்டுகால நிர்வாகத்தின் தோல்வியாகவே பார்க்கிறேன். எனவே தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரமும், வன்முறை கலாச்சாரமும் ஒழிய தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.