டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் வைத்து அவரது தனிச் செயலாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்ட ஸ்வாதி மலிவாலிடம் நேற்று (மே 16) போலீசார் 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது ஸ்வாதி மலிவால் எழுத்துபூர்வமாக போலீசிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து விரைவில் எப்ஐஆர் பதியப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே இன்று (மே 17) தேசிய மகளிர் ஆணையத்தின் முன் ஆஜராகக் கோரி பிபவ் குமாருக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது. ஸ்வாதி மலிவால் க்கு நடந்த கொடுமையை எதிர்த்து பாஜக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. மேலும் ஆம் ஆத்மி கட்சியில் பெண்களின் பாதுகாப்பு இவ்வளவுதானா எனவும் பொதுமக்களிடையே விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில், போலீசிடம் வாக்குமூலம் அளித்த பின் ஸ்வாதி மலிவால் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில்; எனக்கு நடந்தது மிகவும் மோசமானது. இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன். கடந்த சில நாட்களாக எனக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி.
எனது கேரக்டரை தவறாக சித்தரிக்க முயற்சித்தவர்கள், பிற கட்சிகளின் பேச்சை கேட்டு செயல்படுகிறேன் என்று கூறியவர்களையும் கடவுள் மகிழ்ச்சியாக வைத்திருக்கட்டும். நாட்டில் இப்போது முக்கியமானது தேர்தலே அன்றி நான் இல்லை. நாட்டின் பிரச்சினையே இப்போது முக்கியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.