மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமரானால் இன்னும் 3 ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.
ஹிமாச்சல பிரதேசம் நூர்பூரில் இன்று (மே 18) நடந்த பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசியதாவது:
10 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் எப்படி இருந்தது? இன்று அதே இந்தியா பிரதமர் மோடியின் தலைமையில் முன்னேறி வருகிறது. மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் அரசியல் மாறி வருவதை நாம் பார்த்திருக்கிறோம்.
இந்தியாவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது என்று அம்பேத்கர் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதியுள்ளார். கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சிக்கிறது.
மோடியின் தலைமையில் இந்தியாவின் பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்து இன்று 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மூன்றாவது முறையாக மோடி பிரதமரானால் இன்னும் 3 ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும். உலகின் மிக மலிவான மற்றும் பயனுள்ள மருந்து இன்று இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்கி, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும். இவ்வாறு தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.