தேர்தல் முடிவடைவதற்குள் பிரதமர் பதவி குறித்து இண்டி கூட்டணியில் மோதல் ஏற்பட்டு உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஹரியானா மாநிலம் பிவானியில் இன்று (மே 23) நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
1962ல் சீனாவுக்கு எதிரான போரில் இந்தியா தோற்றதற்கு இந்திய ராணுவத்தை காங்கிரஸ் குறை கூறியது. இன்றும் ராணுவத்தை அவமதிப்பதற்கான வாய்ப்புகளை காங்கிரஸ் தேடி வருகிறது. பழிவாங்கும் நோக்கில் 500 ரூபாயை வீசி எறிந்துவிட்டு ஒரே ரேங்க் ஒரே பென்சன் திட்டத்தை அமல்படுத்திவிட்டதாக காங்கிரஸ் கூறியது.
இந்த தேர்தலில் நீங்கள் பிரதமரை மட்டும் தேர்வு செய்யப் போவதில்லை. நாட்டின் எதிர்காலத்தையும் தேர்வு செய்ய உள்ளீர்கள். இந்த தேர்தலில் ஒரு பக்கம், நீங்கள் சோதித்து முயற்சி செய்த சேவகன் மோடி உள்ளேன். மறுபக்கம் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
தேர்தல் முடிவதற்குள் பிரதமர் பதவி குறித்து இண்டி கூட்டணியில் மோதல் உருவாகி உள்ளது. 5 ஆண்டுகளில் 5 பிரதமர்கள் பதவியேற்பார்கள் என்று அக்கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். வகுப்புவாதம், ஜாதிவெறி மற்றும் வாரிசு அரசியலின் கலவையாக இண்டி கூட்டணி உள்ளது.
மோடி இருக்கும் வரை பழங்குடியினர், பட்டியலின இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வரை ராமர் கோயில் கட்ட அனுமதிக்கவில்லை.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.