நீண்ட உறக்கத்திலிருந்து எப்போது விழிப்பார் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்று (மே 24) தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, கடந்த பத்து ஆண்டுகளில், தமிழகத்துக்கு 15 புதிய மருத்துவக் கல்லூரிகளை வழங்கியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் மருத்துவக் கல்வி இடங்கள், கடந்த பத்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும், நீட் தேர்வு மூலம், சாமானிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியரும் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஆனால், திமுகவினர் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளுக்கான வருமானம் பாதிக்கப்பட்டதால், நீட் தேர்வை, திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையம், பத்து லட்சம் பேர் மக்கள் தொகைக்கு, 100 மருத்துவ இடங்கள் என்ற விதியை அறிமுகப்படுத்தியது. இதன்படி, தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளில், 15 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டதால், மேலும் புதிய கல்லூரிகள் அமைக்கப்படும் வாய்ப்பு குறைந்தது.
இதனை அடுத்து, தமிழக பாஜக உள்ளிட்ட கட்சிகள், தேசிய மருத்துவ ஆணையத்தை வலியுறுத்தியன் பேரில், இந்த புதிய விதி, 2025ஆம் ஆண்டிற்குப் பிறகே நடைமுறைக்கு வரும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தது.
இதன்படி, புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 26 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திமுக அரசு, புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்காமல், முற்றிலுமாகப் புறக்கணித்து விட்டது.
தமிழகத்தில் மயிலாடுதுறை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில், புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க விண்ணப்பிக்கப் போவதாக திமுக அரசு கூறியிருந்த நிலையில், அதற்கான குறித்த காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்கத் திமுக அரசு தவறியதால், தற்போது, தமிழகத்தில் சுமார் 900 மருத்துவக் கல்வி இடங்கள் பறிபோயிருக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதி, 2025ஆம் ஆண்டில்தான் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டவுடன், உடனடியாக, தமிழகத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க திமுக அரசு விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆனால், அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைந்தால் திமுகவுக்கு அதனால் எந்த லாபமும் இல்லை என்பதற்காக, தமிழக மாணவ, மாணவியரின் மருத்துவக் கல்வி வாய்ப்பை முற்றிலுமாகப் புறக்கணித்திருக்கிறது திமுக. ஆண்டுக்கு சுமார் 900 மருத்துவக் கல்வி இடங்கள் இதனால் பறிபோயிருக்கின்றன.
ஏழை, எளிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் மருத்துவக் கல்விக் கனவு, திமுகவால் முற்றிலுமாகத் தகர்ந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி மத்திய அரசின் மீது பழி போடுவதை மட்டுமே வேலையாக வைத்திருக்கும் திமுக, தனது இந்த கையாலாகாத தனத்துக்கு என்ன பதில் வைத்திருக்கிறது?
உண்மையில், அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதை விட, தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதில் தான், திமுக மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறது.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், தமிழகத்துக்குப் புதிய நலத்திட்டங்கள் வழங்கும் போதெல்லாம், அதில் ஸ்டிக்கர் ஒட்டுவதைத் தவிர ஒரு துரும்பைக்கூட அசைக்காத கட்சி திமுக.
கடந்த 2022ஆம் ஆண்டு 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் அமைக்கப்பட்டபோது, இது மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் கனவு என்றெல்லாம் நாடகமாடிய திமுக, தற்போது ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாகியும், ஒரு மருத்துவக் கல்லூரிக்குக் கூட விண்ணப்பிக்காமல், மீதமிருக்கும் 6 மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைய இருந்த வாய்ப்பையும், ஆண்டுக்கு 900 மருத்துவர்களை உருவாக்கும் வாய்ப்பையும், திமுகவின் கையாலாகாததனத்தால் பறிகொடுத்திருப்பது யார் கனவு என்பதை, முதலமைச்சர் ஸ்டாலின் தெளிவுபடுத்துவாரா?
இவ்வாறு தலைவர் அண்ணாமலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.