கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் இருந்த பாறையில் 1892 ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் தியானம் செய்தார். அவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இன்று (மே 31) அதே பாறையில் 132 ஆண்டுகளுக்கு பிறகு நரேந்திர தாமோதர தாஸ் என்ற பெயரை தாங்கியுள்ள பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்வது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் நடந்த அகில உலக அனைத்து சமய மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் முன்பு, கன்னியாகுமரி வந்த விவேகானந்தர்,குமரிக் கடலின் நடுவில் அமைந்துள்ள, அன்னை குமரி தவம் செய்த பாறையில் அமர்ந்து தியானம் செய்துவிட்டு ஆன்மிக ரீதியாகவும், மன ரீதியாகவும் தன்னை வலுப்படுத்திக் கொண்டார். பின்பு அமெரிக்கா சென்ற அவர், சிகாகோ மாநாட்டில் சிறப்பாக பேசி ஹிந்து மதத்தின் அருமை பெருமைகளை உலகம் முழுவதும் அறிய செய்தார்.
அதேபோல, ஆன்மிக ரீதியாகவும், மன ரீதியாகவும் தியானம் மூலம் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த அதே இடத்தில் தியானம் செய்வது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இருவர் பெயரும் நரேந்திரன் என்று இருப்பது தெய்வீகச் செயல்தான் என சமூக வலைத்தளங்களில் சமூக ஆர்வலர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.