இரண்டு மாத தேர்தல் பிரசாரத்துக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபத்தில் மே 30ம் தேதி தியானத்தில் அமர்ந்தார்.தொடர்ந்து ஜூன் 1ம் தேதி வரையில் தியானம் செய்ய உள்ளார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் 33 வருடங்களுக்கு முந்தைய ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
1991ம் ஆண்டு, டிசம்பர் 11ம் தேதி, ஏக்தா யாத்ராவின்போது எடுக்கப்பட்ட படம் இது. இந்த யாத்திரை, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவகத்தில் தொடங்கி காஷ்மீரில் நிறைவடைந்தது. இந்த புகைப்படத்தில், நரேந்திர மோடியும், கட்சியின் மூத்த தலைவர் டாக்டர் முரளி மனோகர் ஜோஷியும் ஒன்றாக காணப்படுகின்றனர். சுவாமி விவேகானந்தர் சிலைக்கு இரு தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.
ஏக்தா யாத்திரை 1991, டிசம்பர்-ல் தொடங்கி 1992, ஜனவரி 26ம் தேதியன்று ஸ்ரீநகரில் தேசியக் கொடியேற்றம் நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது. முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான ஏக்தா யாத்திரையில், அப்போது சாதாரண பாஜக தொண்டராக இருந்த நரேந்திர மோடி முக்கிய பங்கு வகித்தார். பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான இந்தியாவின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த யாத்திரை நடத்தப்பட்டது. இந்த பயணம் 14 மாநிலங்களை உள்ளடக்கியது.
மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு விஜயம் செய்து விவேகானந்தர் தியானம் செய்த பாறையில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவிடத்தில் உள்ள தியான மண்டபத்தில் தியானம் செய்வது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியின் தியானப் புகைப்படங்களே வைரலாகி வருகிறது.
இந்த நிலையில்தான் பிரதமர் மோடிக்கும், கன்னியாகுமரிக்கும் இடையேயான தொடர்பையும், பாஜகவின் வெற்றியில் கன்னியாகுமரி எப்படி துவக்க புள்ளியாக இருந்தது என்பதையும் இந்த படம் உணர்த்துகிறது.
ஏக்தா யாத்திரையின் போது, டாக்டர் முரளி மனோகர் ஜோஷி மற்றும் நரேந்திர மோடி உட்பட அனைத்து பங்கேற்பாளர்களும் சுவாமி விவேகானந்தரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இப்போது அங்குதான் பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.