தோல்வியை ஒப்புக்கொண்டதால் தொலைக்காட்சி விவாதங்களை தவிர்க்கும் காங்கிரஸ்: ஜே.பி.நட்டா விமர்சனம்!

நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை (ஜூன் 1) முடிந்தபின், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகும். இதுதொடர்பான விவாதங்களில் பங்கேற்கப் போவதில்லை என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. ‘‘ஜூன் 4-ம் தேதி முடிவுகள் வெளியாகும். அதற்கு முன், டி.ஆர்.பி.க்காக யூகமான விவாதங்களில் ஈடுபடுவதற்கான அவசியம் இல்லை’’ என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்தார்.

காங்கிரசின் இந்த முடிவை விமர்சனம் செய்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, ‘‘கருத்துக்கணிப்பு விவாதங்களில் பங்கேற்பதில்லை என்ற காங்கிரசின் முடிவானது, 2024 மக்களவை தேர்தல் தோல்வியை அக்கட்சி ஒப்புக்கொண்டுவிட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது’’ என்றார்.

7-வது மற்றும் கடைசிக் கட்டமாக இன்று (சனிக்கிழமை) நடைபெறும் வாக்குப்பதிவில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம், ஏனெனில் காங்கிரஸ் பொதுவாக தனக்கு சாதகமான முடிவுகளை எதிர்பார்க்காதபோது விலகிவிடும் என்றும் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top