கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தர் மண்டபத்தில், 45 மணி நேர தியானத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி, திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபத்தில், பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் தியானத்தை மே 30ம் தேதி இரவு துவக்கினார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில், மூன்று அறைகள் தயார் செய்யப்பட்டது. பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு அதிகாரிகள் அலுவலகம், மற்றொன்று தியானம் செய்வதற்காகன அறை என தயார் செய்யப்பட்டது.
கடந்த மூன்று நாளாக பிரதமர் தியானம் மற்றும் மவுன விரதம் மேற்கொண்டார். 3வது நாளான இன்று (ஜூன் 01) சூரிய நமஸ்காரம் செய்ய தியானத்தை நிறுத்திவிட்டு பிரதமர் மோடி வெளியே வந்தார். மேகமூட்டம் காரணமாக, சூரிய நமஸ்காரம் செய்யாமல், பிரதமர் மோடி மீண்டும் உள்ளே சென்று தியானத்தில் ஈடுபட்டார். மாலை 3 மணியளவில் தியானத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கிளம்பி, படகு மூலம் திருவள்ளுவர் சிலைக்கு சென்றார். அங்கு திருவள்ளுவர் சிலையின் வலது பாதத்தில் மலர் தூவியும், மாலையை வைத்தும் மரியாதை செலுத்தினார். பிறகு சிலையை சுற்றிப்பார்த்தார்.
பின்னர் அங்கிருந்து கிளம்பிய பிரதமர், கடற்கரையில் அமைந்திருக்கும் விருந்தினர் மாளிகை சென்று சிறிது நேரம் ஓய்வுக்கு பின்னர்ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரத்துக்கு கிளம்பினார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி மற்றும் அவர் பயணிக்கும் சாலைகள் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.