நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு தேசபக்தி காவியத்தை திரையில் பார்த்த ஆத்மார்த்த உணர்வு அமரனை கண்டுகளித்த போது எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஏற்பட்டது.வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு அற்புதமான நெகிழ்வு என பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹெச்.ராஜா கூறியதாவது: மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கதைக்களமாக கொண்டு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அவர்கள் இயக்கத்தில் சகோதரர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைக்காவியத்தின் சிறப்புக் காட்சியை எனது குடும்பத்தினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் கண்டு களித்தேன்.
இராணுவ வீரர்களின் வாழ்வியலை கண்ணாடி போல் பிரதிபலித்து காலத்தால் அழியாத காவியம் போல், திரையில் தீட்டப்பட்ட ஓவியம் போல் திகழ்கிறது ‘‘அமரன்’’. இத்திரைக்காவியத்தில் சகோதரர் சிவகார்த்திகேயன் அவர்கள் மேஜர் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்து காட்டியுள்ளார்.
நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு தேசபக்தி காவியத்தை திரையில் பார்த்த ஆத்மார்த்த உணர்வு அமரனை கண்டுகளித்த போது எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஏற்பட்டது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு அற்புதமான நெகிழ்வு.
தமிழகம் கடந்து தேசமெங்கும் ‘‘அமரன்’’ திரைக்காவியத்திற்கு மக்கள் அளித்துள்ள மகத்தான வரவேற்பு எல்லையில் கொட்டும் மழையிலும், உயிரை உறைய வைக்கும் கொடும்பனியிலும் தன்னையே வருத்திக் கொண்டு அனுதினமும் உயிரை பணயம் வைத்து தேசம் காக்க போராடும் இராணுவ வீரர்களுக்கு அளிக்கும் அன்பார்ந்த கௌரவம் என்பதில் ஐயமில்லை.
இராணுவ வீரர்கள் தேசத்திற்காக செய்கிற தியாகங்களையும், எல்லையில் அவர்கள் எதிர்கொள்கிற இன்னல்களையும் நாம் அறிந்து கொள்ள இத்திரைக்காவியம் ஓர் ஆவணம் போல் அமைந்துள்ளது. மக்கள் அனைவரும் குடும்பத்துடன் இத்திரைக்காவியத்தை காணவேண்டும் என்பது எனது அபிப்ராயம்.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் சகோதரர் சிவகார்த்திகேயன் இருவரின் திரையுலக வரலாற்றிலும் ‘‘அமரன்’’ எனும் காலத்தால் அழியாத அமரகாவியம் என்றென்றும் கலங்கரை விளக்கமாக திகழும் என்பதில் மிகையேதும் இல்லை.
அமரன் திரைப்பட குழுவினர் அனைவருக்கும் நாட்டு மக்கள் அனைவரின் சார்பிலும் தமிழக பாஜக சார்பிலும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஹெச்.ராஜா கூறியுள்ளார்.