வக்பு சட்டத் திருத்தத்தில் இரட்டை நிலை: கேரள கட்சிகள் மீது பிரகாஷ் ஜவடேகர் தாக்கு

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் இரட்டை நிலையை ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) கட்சிகள் கடைபிடித்து வருகின்றன என்று பாஜக மூத்த தலைவர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக கேரள மாநில பாஜக பொறுப்பாளரான பிரகாஷ் ஜவடேகர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வக்ஃப் வாரியங்களில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வக்ஃப்  சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தற்போது இந்த சட்ட மசோதாவானது, நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணையில் உள்ளது.

ஒரு பிரச்சினைக்கு ஒரு நாட்டில் எப்படி 2 விதமான சட்டங்கள் இருக்க முடியும்? கோயில், குருத்வாரா, கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சொந்தமான சொத்துகளில் பிரச்சினை இருந்தால் நீங்கள் நீதிமன்றங்களை அணுகலாம். ஆனால் வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமான சொத்துகளில் பிரச்சினை இருந்தால் நீங்கள் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியாது. இது எப்படி நியாயமாகும்? எனவேதான், வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் கேரளாவில் உள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) கட்சிகள், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) கட்சிகள் இரட்டை நிலையை கடைபிடித்து வருகின்றன.

வங்கதேச நாட்டில் இந்துக்கள் தாக்கப்பட்டபோதும், கனடாவில் இந்து கோயில், இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோதும் அதை எதிர்த்து இவர்கள் குரல் கொடுக்கவில்லை. ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) மட்டுமே எதிர்த்து போராடி வருகின்றனர். ஒரு சாராரை திருப்திப்படுத்தும் முயற்சியில் கேரள கட்சிகள் உள்ளன. இந்த இரட்டை நிலையை அக்கட்சிகள் மாற்றிக் கொள்ளவேண்டும். கேரளாவில் உள்ள வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமான நிலங்கள் தொடர்பான தகவல்களை மாநில அரசு வெளியிடவேண்டும்.

இந்தப் பிரச்சினையானது இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. ஆனால் தீவிரவாதிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான பிரச்சினையாகும். தீவிரவாதிகளை திருப்திப்படுத்தும் செயலை எந்த மாநில அரசும் செய்வதற்கு, பாஜக தலைமையிலான மத்திய அரசு அனுமதி தராது.

எர்ணாகுளம் மாவட்டம் முனம்பம் கிராமத்தில் உள்ள வக்ஃப் வாரியச் சொத்து விவகாரங்களில் தலையிட்டு அங்கு நீதி வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அங்குள்ள அப்பாவி மக்களுக்கும், உதவிக்கு ஏங்கும் மக்களுக்கும் நீதியை வழங்கவேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top