துணை முதல்வர் உதயநிதியின் துறையான விளையாட்டுத் துறையின் செயலற்ற நிலையால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்,முறையான உடற்பயிற்சிகள் மற்றும் விளையாட்டில் முறையான பயிற்சி எடுக்க இயலாத நிலை உள்ளது. மத்திய அரசு பல்வேறு திட்டங்களை மாணவர்களுக்காக வகுத்து வருகிறது. ஆனால் அதனை தமிழகத்தில் உள்ள திமுக அரசு நடைமுறை படுத்தாமல் இருக்கிறது.
தமிழகத்தில் மாவட்டம் தோறும் மைதானங்கள் உருவாக்கப்பட்டு விளையாட்டுக்கு தனி பயிற்சி அளிக்கப்படும் என திமுக அரசு கூறியது. ஆனால் இதுவரை ஒரு மைதானம் கூட அமைத்த பாடில்லை.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியைச் சேர்ந்த ரதிஷ் பாண்டியன் என்பவர் திண்டுக்கல் பள்ளிக் கல்வித் துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில கேள்விகளை கேட்டுள்ளார். அதற்கு பள்ளிக் கல்வித் துறை அளித்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 27.09.24 அன்று பள்ளிக் கல்வித் துறை அளித்துள்ள பதிலில். திண்டுக்கல் ஒருங்கிணைந்த வருவாய் மாவட்டத்தில் 170 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில், 140 பள்ளிகளில் மைதானங்கள் உள்ளன. 30 பள்ளிகளில் மைதானங்கள் இல்லை.
குறிப்பாக 93 பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் இல்லை என்ற அதிர்ச்சியூட்டும் தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மைதானங்கள் இருக்கும் சில பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்கள் இல்லாமலும், மைதானங்கள் இல்லாத பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்களும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலேயே 93 பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை என்றால் மாநிலம் முழுவதும் இன்னும் ஆயிரக்கணக்கான பள்ளிகளின் நிலைமை இப்படித்தான் இருக்கும் என்பதை நாம் புரிந்துக்கொள்ள முடிகிறது. விளையாட்டு வீரர்களுக்கு போதுமான பயிற்சி மற்றும் வசதிகளை செய்துக்கொடுக்காமல் ஏமாற்றி வருவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.