பால் தாக்கரே, வீர சாவர்க்கரை அவமதித்த காங்கிரசுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி: அமித் ஷா குற்றச்சாட்டு

பால் தாக்கரேவையும், வீர சாவர்க்கரையும் அவமரியாதை செய்து வரும் காங்கிரஸ் கட்சியுடன் உத்தவ்தாக்கரே கூட்டணி வைத்துள்ளார் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டு பேசியதாவது: பால் தாக்கரேவையும் வீர சாவர்க்கரையும் அவமரியாதை செய்து வரும் காங்கிரஸ் கட்சியுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி வைத்துள்ளார். உத்தவ் தாக்கரேவுக்கு நான் சவால் விடுகிறேன்.

வீர சாவர்க்கரைப் பற்றி ஒரு சில நல்ல வார்த்தைகளை ராகுல் காந்தி பேசுவாரா என்று உத்தவ் தாக்கரே கேட்டுப் பார்க்கட்டும். பால் தாக்கரேவைப் பற்றி காங்கிரஸ் தலைவர்கள் யாராவது நல்லவிதமாக பாராட்டி புகழ்ந்து பேசியிருக்கிறார்களா? இதுபோன்ற முரண்பாடுகளை வைத்துக் கொண்டு கூட்டணி என்ற பெயரில் போட்டியிடுபவர்களை மஹாராஷ்டிர மக்கள் இனம் கண்டுகொள்ள வேண்டும்.

ராமர் கோயில், குடியுரிமை சட்ட திருத்தம், பொது சிவில் சட்டம், வக்பு வாரிய சட்டம் போன்றவற்றை எதிர்ப்பவர்களுடன் உத்தவ் கூட்டணி வைத்துள்ளார். உத்தவின் சிவசேனா, காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் நம்பகத்தன்மை இல்லாதவை. ஆனால், பாஜக தேர்தல் அறிக்கை மஹாராஷ்டிர மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருக்கிறது.

உலமாக்களின் அமைப்பு ஒன்று சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு கோரி வருகிறது. அதை மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் ஆதரிக்கிறார். எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி.க்களுக்கான இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க மஹாராஷ்டிர மக்கள் ஆதரிக்கிறார்களா? மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு என்று நமது அரசியலமைப்பு சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. ஆனால், ஆட்சிக்கு வருவதற்கு முன்பே காங்கிரஸ் அந்த வாக்குறுதியை அளித்துள்ளது. இதை மக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் அரசியல் செய்கிறது. இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மாநில பாஜக தலைவர் சந்திரசேகர பவன்குலே உட்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top