விருதுநகர் மாவட்டம், கூரைக்குண்டு அருகே பாஜக மாவட்ட அலுவலகத்தில் இருந்து திமுக அரசால் அகற்றப்பட்ட பாரத மாதா சிலையை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்க, வருவாய்த்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு 07.08.2023 அன்று விருதுநகர் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட அலுவலகத்தின் பட்டா நிலத்தில் வைக்கப்பட்ட பாரத மாதா சிலையை விருதுநகர் வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள்,சட்ட விதிமுறைகளுக்கு முரணாக தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, சட்டத்திற்கு புறம்பாக இரவோடு இரவாக சுவர் ஏறி குதித்து உள்புறமாக பூட்டிய மெயின் கேட்டின் பூட்டை உடைத்து அராஜகமான முறையில் மாவட்ட அலுவலகத்தில் அமைத்த பாரத மாதா சிலையை அகற்றி எடுத்து சென்றனர்.
திமுக அரசால் எடுத்துச்சென்ற பாரத மாதா சிலை விருதுநகர் தாசில்தார் அலுவலகத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது.
பாரத மாதா சிலையை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் அவர்களால் 18.08.2023 அன்று வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் வணங்காமுடி அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் Additional solicitor general of India மதுரை உயர்நீதிமன்றம் கோவிந்தராஜ் அவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்கள்.
அந்த வழக்கானது நேற்று முன்தினம் 11.11.2024 மதுரை உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத் தலைவரும் வழக்கறிஞர் பிரிவு மாநில அமைப்பாளர் பால் கனகராஜ் அவர்கள், வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத் தலைவர் அனிதா அவர்கள், மூத்த வழக்கறிஞர் அனந்த பத்மநாபன், மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர்கள் பிரிவு மாவட்ட தலைவர் தனபால் அவர்கள் ஆகியோர்கள் இணைந்து அனைத்து வகையான ஏதுவான வாதங்களையும் சிறப்பாக எடுத்துரைத்தனர். அனைத்து வாதங்களையும் ஏற்றுக் கொண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர் மாண்புமிகு ஆனந்த வெங்கடேஷ் அவர்கள் தீர்ப்பை வழங்கினார்.
அந்த தீர்ப்பில், பாரத மாதா சிலையை அகற்றி சென்றது சட்டத்திற்கு புறம்பானது என்றும் பாரத மாதா சிலையை வருவாய்துறையினரே மீண்டும் பாஜகவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், மேலும் பாஜகவினர் தங்களது அலுவலகத்தில் பாரத மாதா சிலையை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.
திமுக அரசால் பாரத மாதா சிலை அகற்றப்பட்டதை பாராளுமன்றத்தில் முன்பே பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சுட்டிக்காட்டி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நீதிமன்ற அனுமதியுடன் மீண்டும் அதே இடத்தில் அதே பாரத மாதா சிலையை அமைப்போம் என விருதுநகரில் சூளுரைத்தார் தலைவர் அண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.