சென்னை, கிண்டி அரசு உயர் சிறப்பு பல்நோக்கு மருத்துவனையில் கத்திக்குத்து தாக்குதலில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார், ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா.
இதுகுறித்து ஹெச்.ராஜா கூறியிருப்பதாவது: கிண்டி அரசு உயர்சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் நோயாளி ஒருவரின் மகனால் கத்திக்குத்து தாக்குதலில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புற்றுநோய் சிகிச்சை பிரிவின் தலைமை மருத்துவர் பாலாஜி அவர்களை இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினேன்.
மக்களின் உயிர்காக்கும் மருத்துவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டியதும், உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியதும் அரசின் கடமை. மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவது வேதனைக்குரிய விஷயம்.
மருத்துவர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை உருவாக்குவதோடு மட்டும் நின்றுவிடாமல் வரும் காலங்களில் மருத்துவர்களின் பாதுகாப்புக்கும், மருத்துவமனைகளின் பாதுகாப்புக்கும் தேவையான நிரந்தரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சகமும், காவல்துறை நிர்வாகமும் இணைந்து மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரிகள், பல்நோக்கு மருத்துவமனைகளில் பாதுகாப்புப் பணிக்கு காவல்துறை அதிகாரிகளை நியமித்து காவல் கண்காணிப்பு மையம் ஒன்றை மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே அமைக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
மருத்துவர் பாலாஜி அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் பணிக்குத் திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு ஹெச்.ராஜா கூறியுள்ளார்.