காலனி ஆட்சி கால அநீதிக்கு எதிரான பழங்குடி இன மக்களின் உரிமைப் போராட்டத்தின் முதல் குரலாக ஒலித்தவர், பழங்குடி இன மக்களை சுதந்திரப் போராட்ட களத்திற்கு தயார்படுத்தியவர் பகவான் பிர்சா முண்டா என, பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள செய்தியில்; காலனி ஆதிக்க ஆட்சி காலத்தில் பிரிட்டிஷ் படைகளால் பாரதத்தில் பழங்குடி இன மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலை இருந்து வந்தது. அதைத் துணிச்சலோடு எதிர்த்துப் போராடிய பகவான் பிர்சா முண்டா அவர்களின் பிறந்த தினம் இன்று…
காலனி ஆட்சி கால அநீதிக்கு எதிரான பழங்குடி இன மக்களின் உரிமைப் போராட்டத்தின் முதல் குரலாக ஒலித்தவர், பழங்குடி இன மக்களை சுதந்திரப் போராட்ட களத்திற்கு தயார்படுத்தியவர் பகவான் பிர்சா முண்டா.
அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் ‘‘காடுகளின் ஒவ்வொரு சதுர அடியும் ஆங்கிலேய அரசாங்கத்திற்கே சொந்தம்’’ எனும் சிறப்பு சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆங்கிலேயே அரசால் இந்தியாவில் பழங்குடி இன மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதை கண்டு வெகுண்டெழுந்தார் பிர்சா முண்டா. அநீதிக்கு எதிரான பழங்குடி இன மக்களின் உரிமைப் போராட்டத்தை முன்னின்று நடத்தினார். 1895-ம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது பிர்சா முண்டாவின் வயது வெறும் 19-தான். இதுவே பழங்குடி இன மக்களின் வரலாற்றில் முதல் போராட்டமாகும்.
பிரிட்டிஷ் அரசாங்கம் பழங்குடிகளின் நிலங்களைப் பறித்தபோது ‘‘ஒரு குரலை விட, ஒட்டு மொத்த மக்களின் குரலே அதிகாரத்தை அசைக்கும்’’ என முழங்கி, பழங்குடி மக்களை ஒன்று திரட்டிப் போராடினார்.
பிரிட்டிஷ் படைகளுக்கு எதிரான போராட்டத்தின் போது வில் மற்றும் அம்பு ஏந்தி உல்குலான் எனும் கொரில்லா போர் முறையின் மூலம் ஆங்கிலேய படைகளை நிலைகுலைய வைத்து நிர்மூலமாக்கியவர் பிர்சா முண்டா.
25 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த பகவான் பிர்சா முண்டா அவர்கள் தனது வாழ்நாளின் இறுதிவரை ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். பழங்குடி இன மக்களால் ‘‘மண்ணின் மைந்தன்’’ என்று அழைக்கப்பட்டார்.
பகவான் பிர்சா முண்டா அவர்கள் பழங்குடி இன மக்களுக்கு மட்டுமல்ல பாரதத்திலுள்ள அனைவருக்குமே முன்னோடியான தேசபக்தர் என்பதில் மிகையேதும் இல்லை. அவரது பிறந்த தினத்தில் அவர்தம் வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்து போற்றி வணங்குவோம். இவ்வாறு ஹெச்.ராஜா கூறியுள்ளார்.