திருச்சியில் ஓடும் பேருந்தில் இளம் ஆட்டோ ஓட்டுநர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநில அரசின் படுதோல்வியை காட்டுகிறது என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருச்சியில் விஷ்ணு என்ற இளம் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இன்று காலை 9 மணிக்கு ஓடும் பேருந்தில் இருந்து கீழே தள்ளப்பட்டு ஐந்து பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வன்முறை வேரூன்றி வருவதை இந்த சம்பவம் உணர்த்துகிற அதே வேளையில், மாநில அரசின் நிர்வாகம் சீர்கெட்டுப் போயுள்ளதையும் தெளிவாக்குகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யும் ரவுடி கும்பல்களின் அட்டகாசம் பெருகி வருகிறது. காவல் துறை செயலிழந்து போயுள்ளது என்பதை சொல்லவும் வேண்டுமோ? ரவுடிகளை, சமூக விரோதிகளை அடையாளம் கண்டு அவர்களை அடக்கி வைக்க வேண்டிய காவல்துறை குற்றம் நிகழ்ந்த பின்னர் குற்றவாளிகளை கைது செய்து விட்டோம் என்று மார் தட்டி கொள்வதில் எந்த பயனும் இல்லை. குற்றம் நிகழாது இருப்பதற்கு தான் காவல் துறை முயற்சிக்க வேண்டும்.
வரும்முன் காப்பதை மறந்து விட்டு, வந்த பின் கண்டு பிடித்து விட்டோம் என்பது நிர்வாக சீர்கேடு மட்டுமல்ல, மாநில அரசின் படு தோல்வி. இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.