உணவு, குடிநீர் வழங்கவில்லை; பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்த பொதுமக்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யாத திமுக அரசைக் கண்டிக்கும் விதமாக அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வாரி இறைத்தனர். இதனால் அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயலால் சென்னை உள்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த புயல் கரையை கடந்தாலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சாத்தனூர் அணையை திமுக அரசு நள்ளிரவில் திறந்து விட்டதால், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், திண்டிவனம் உள்பட பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மரக்காணம், கோலியனூர், நன்னாட்டம்பாயைம், பஞ்சமா தேவி, கல்பட்டு, பிடாகம், குச்சிப்பாளையம், பேரங்கியூர், நன்னாடு, பெரும்பாக்கம், காணை, மாம்பலப்பட்டு, காங்கேயனூர், செஞ்சி, மேல்மலையனூர், வானூர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

வீடுகள், கடைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். பல இடங்கள் குட்டி தீவு போல் காட்சியளிக்கிறது. மேலும் விளைநிலங்களில் மழைநீர் புகுந்துள்ளதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் மழை நீர் வெளியேறாததால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். பெஞ்சல் புயலின்போது திமுக அரசு சென்னையை மட்டுமே கவனத்தில் கொண்டுள்ளது. பிற மாவட்டங்களை கண்டுகொள்ளாமல் விட்டதே இந்த வெள்ள பாதிப்புக்கு முக்கிய காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதற்கிடையே தான் இன்று வெள்ளம் பாதித்த இருவேல்பட்டு பகுதியில் உள்ள மக்கள், தங்களுக்கு அடிப்படை தேவைகளான உணவு, குடிநீர் வசதிகளை திமுக அரசு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்றும், தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்துவதற்கான எந்த முயற்சியையும் இந்த அரசு ஏற்படுத்தவில்லை என்று போராட்டம் நடத்தினர்.

இதனால் போராட்டம் நடத்தும் மக்களிடம் பேசுவதற்காக சென்ற திமுக அமைச்சர் பொன்முடி சென்றார். அவருடன் அவரது மகன் கவுதம சிகாமணி, விழுப்புரம் ஆட்சியர் பழனி உள்ளிட்டவர்கள் இருவேல்பட்டுக்கு சென்றனர். ஆனால் காரை விட்டு இறங்காமல் பொன்முடி பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்தனர்.

இதனால் அங்கிருந்து தப்பிச்சா போதும் என்று பொன்முடி மற்றும் திமுகவினர் ஓட்டம் பிடித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top