டங்ஸ்டன் சுரங்கம் வராது; மீறி வந்தால் களத்தில் இறங்க தயார்: தலைவர் அண்ணாமலை உறுதி

‘‘மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் வரவே வராது. மீறி வந்தால், நானும் போராட்டத்தில் கலந்து கொள்ள தயார்’’, என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை நந்தனத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சியை பார்வையிட்ட தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: பொது மக்கள் அனைவரும் குழந்தைகளை புத்தக கண்காட்சிக்கு அழைத்து வர வேண்டும். புத்தகங்களை அறிமுகம் செய்ய வேண்டும்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை போன முறை நடத்தியதுபோல் நடத்தாமல் நேர்மையாக நடத்துவார்கள் என நம்புகிறோம். சென்ற முறை ஜனநாயகத்தை புதைகுழியில் புதைத்தார்கள். பரிசு கொடுத்து, பணம், இறைச்சி, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிகொடுத்தார்கள். இந்த முறை அரசியலமைப்பின்படி நடத்தப்பட வேண்டும். தேர்தலுக்கு நேரம் உள்ளது. அனைத்து தலைவர்களுடன் பேசி எப்படி எதிர்கொள்வது முடிவு செய்வோம். இந்த முறை சிறப்பு கவனம் கொடுத்து தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கடிவாளம் போட வேண்டும்.

உப்பு சப்பு இல்லாத காரணத்திற்கு திமுக ஆர்ப்பாட்டம் அறிவிக்கின்றோம் என அறிவித்து, நடத்தி உள்ளனர். 1970ல் தமிழ்த்தாய் வாழ்த்து வந்தது. உண்மையாக இருக்கக்கூடியதை வெட்டி ஒட்டி கருணாநிதி கொண்டு வந்தார். 1991ல் ஜெயலலிதா ஆட்சியின் போது சட்டசபையில் முதல்முறையாக ஒலிபரப்பு செய்தனர். 1970 முதல் அரசு விழாக்களில் பயன்படுத்தினர். 1991ல் சட்டசபையில் ஒலிபரப்பு செய்யப்படும் மரபு உள்ளது. ஆளுநர் ஒரு கருத்தை சொல்லலாம். மாநில அரசு ஒரு கருத்தைச் சொல்லலாம். அது வேறு. கருத்துபரிமாற்றம் என்பது வேறு. ஜனநாயக முறையில் ஏற்பதும் ஏற்காததும் நம்மிடம் உள்ள பரஸ்பரமான விஷயம்.

ஆளுநர் ஒரு கருத்தை சொன்னார்கள். அதை ஜனநாயக முறைப்படி ஏற்காதது வேறு. போன ஆண்டு ஏன் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. சென்ற ஆண்டும் இதே விஷயத்தை தான் சொன்னார். இதைத்தான் வலியுறுத்தினார். தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாக ஒலித்த பிறகு வெளியேறினார்கள். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முழு மரியாதை கொடுத்துள்ளார்.

சென்ற ஆண்டு இதே பிரச்னை நடத்தாத தி.மு.க., இந்தாண்டு நடத்துகிறது என்றால், அண்ணா பல்கலை பிரச்னை திசை திருப்ப வேண்டும். அவர்கள் கட்சி சம்பந்தப்பட்டு உள்ளது. கெட்ட பெயர் ஏற்பட்டு உள்ளது. பொது மக்கள் கோபத்தில் உள்ளார்கள் என்ற ஒரே காரணத்திற்காக உப்பு சப்பு இல்லாத போராட்டம் நடத்தி உள்ளது. போலீசார் எப்படி அனுமதி கொடுத்தனர்.

சமுதாய பிரச்னையாக இருக்கும் அண்ணா பல்கலையில் நடந்த குற்றத்தை கண்டித்து, வேகமாக நீதி கொடுக்க வேண்டும் எனக்கூறி, எதிர்க்கட்சிகள் சாலைக்கு வந்தால் கைது செய்கின்றீர்கள். பாஜக மகளிர் அணியினரை கைது செய்து ஆட்டுக் கொட்டகையில் அடைத்தீர்கள். கேவலப்படுத்துகிறோம் என்று அவர்களை கேவலப்படுத்துகின்றனர். நடந்துபோனால் கைது. அப்படி இருக்கும்போது எப்படி தி.மு.க.,வுக்கு அனுமதி கொடுத்தீர்கள். கம்யூனிஸ்ட் தோழர்கள் சொன்னதை நினைவுபடுத்துகிறேன், தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடந்து கொண்டு இருக்கிறது.

ஆளுநரை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆபாசமான போஸ்டரை தி.மு.க.,க்காரன் பெயரை போட்டே ஒட்டுகிறான். போலீசார் கையைக் கட்டிக்கொண்டு வாயை பொத்திக் கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தால், இதென்ன நீதி இருக்கா? நியாயம் இருக்கா? உண்மையான போலீஸ் படை இருக்கா? சட்டம் எதற்கு இருக்கிறது.

அரசியலமைப்பின்படி நியமிக்கப்பட்டவர் ஆளுநர். நாளைக்கு முதல்வரை எதிர்த்து பாஜக ஆபாச போஸ்டர் ஒட்டினால்… அவர்களுக்கு ஒரு நியாயம். எங்களுக்கு ஒரு நியாயமா? எங்களுக்கும் தான் முதல்வரை பிடிக்கவில்லை. நாங்களும் முதல்வருக்கு எதிராக போஸ்டர் ஒட்டலாம். ஆனால் ஒட்டவில்லை. இதற்கு காரணம் அந்த பதவி மீது உள்ள மரியாதை. ஆளுநரை எதிர்த்து தி.மு.க.,க்காரன் தைரியமாக ஒட்டுகிறான். அது தப்பு இல்லையா? இல்லை ஒட்டலாம். கருத்து சுதந்திரம் உள்ளது என்றால், பா.ஜ.க.,விற்கும் அனுமதி கொடுங்கள். முதல்வரை எதிர்த்து நானும் கட்சிக்காரர்களை போஸ்டர் ஒட்டச் சொல்கிறேன். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். சட்டம், நியாயம் இருந்தால் நடுநிலையாக இருக்க வேண்டும்.

மதுரையில் விவசாயிகள் தலைமை தபால் அலுவலகம் நோக்கி செல்கின்றனர். மத்திய அரசு இங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படாது. இதனை மாநில அரசு வலியுறுத்தி உள்ளது. நீங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதீர்கள் என தெளிவுபடுத்தி உள்ளது. ஏன் முதல்வர் மதுரைக்கு சென்று விவசாயிளை சந்தித்து, இங்கு டங்ஸ்டன் சுரங்கம் வராது என சொல்வதில் என்ன பிரச்னை உள்ளது. மத்திய அரசு சொன்ன பிறகு, முதல்வர் வாயை திறந்து சொல்வதில் என்ன பிரச்னை. மதுரைக்கு முதல்வர் போயிருக்க வேண்டும்.
மதுரையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு நாங்கள் சொல்வது டங்ஸ்டன் சுரங்கம் வராது. வரவே வராது. மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி உறுதி அளித்துள்ளார். வருவதற்கு வாய்ப்பு இல்லை. நீங்கள் சமாதானம் அடையவில்லையா. ஒரு வேளை வந்தது என்றால் நானும் உங்களுடன் வந்து போராட்டத்தில் அமர்கிறேன். இதை விட என்ன சொல்வது.

வராதுனு சொல்லிவிட்டோம். வரப்போவதில்லை என்று சொல்லிவிட்டோம். எந்த காரணத்திற்கும் வரவிடப்போவது இல்லை என்று சொல்லிவிட்டோம். அதையும் தாண்டி, இன்னும் சொல்லுங்கள் என்றால், நானும் வந்து அமர்கிறேன். மத்திய அரசு வந்து சொல்லிய பிறகு, அரசியல் கட்சிகள் ஏன் தூண்டி விடுகின்றன. முதல்வர் மதுரை செல்ல பயம் ஏன்? துணை முதல்வர், கனிமொழியை அனுப்பி சொல்ல வேண்டியது தானே? தேவையில்லாத விஷயங்களில் முதல்வர் கவனம் செலுத்துகிறார்.

பிறந்த நாள் போஸ்டர்களால் கனிமொழிக்கு பிரச்னை ஏற்பட்டு உள்ளது. அதில் இருந்து தப்பிப்பதற்கு ஆளுநரை அவர் பயன்படுத்துகிறார். அண்ணா பல்கலை பிரச்னையில் இருந்து தப்பிப்பதற்கு ஆளுநரை முதல்வர் பயன்படுத்துகிறார். ஆளுநரை பொறுத்தவரை பகடைக்காயாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் பயன்படுத்துகின்றனர்.

கம்யூ.,க்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டார்கள் என திமுக எம்.பி., ராசா விமர்சித்தது தோழமை குட்டுதல். அவர்களுக்குள் சண்டை போட்டு கொள்வார்கள். திரும்ப மறுநாள் காலை வெட்கமே இல்லாமல் அமர்ந்து பேசுவார்கள். ராசா அப்படி சொல்லியிருந்தால், கம்யூ.,க்கள் கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும். சேகர்பாபு, ‘கொடுக்கிறத கொடுத்தால், வாங்கிக்கொண்டு எங்களுடன் இருப்பார்கள்’ என்று நக்கலாக சொல்கிறார். கம்யூனிஸ்ட் தோழர்கள் அதனை பார்த்துக் கொண்டு உள்ளனர்.

தமிழகத்தில் 3. 5 ஆண்டுகள் தி.மு.க.,விற்கு சாமரம் வீசி கம்யூனிஸ்ட்டுக்கள் நீர்த்து போய்விட்டனர். மக்களுக்காக போராட வேண்டிய ஒரு கட்சி வேடிக்கை பார்த்து கொண்டுள்ளது. ஒவ்வொரு திமு.க.., தலைவர்களும் கேவலப்படுத்துகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சி வேடிக்கை பார்க்கிறது.

போராட்டத்தில் ஈடுபட்டதை கேள்வி கேட்கவில்லை. சேரவிட்டது ஏன் என கேள்வி கேட்கிறோம். எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்று சேரவிடாமல் கைது செய்தீர்கள். அதனை தி.மு.க.,விற்கு ஏன் செய்யவில்லை என்பதே எனது கேள்வி. பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்பார்கள் என்பதற்காக, சட்டவிரோதமாக கூடுதல் என்ற உப்பு சப்பு இல்லாத எப்.ஐ .ஆர்., 50 ரூபாய் அபராதம் நீதிமன்றத்தில் கட்டிவிட்டு வெளியே வந்துவிடுவார்கள். ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் ஒரு சட்டம் என அம்பேத்கர் எழுதி வைத்துள்ளாரா?

சென்ற முறை தேர்தல் ஆணையம் எந்த வேலையையும் செய்யவில்லை. வெளியில் இருந்து சிறப்பு அதிகாரிகளை அனுப்ப வேண்டும் எனக்கூறி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்க குழுவை அனுப்ப போகிறோம். கடந்த முறை பிரச்னை ஆனதும், பாதியில் இருந்து அனுப்பினார்கள். இந்த முறை ஆரம்பம் முதலே சிறப்பு அதிகாரிகளை அனுப்பி தேர்தலை நடத்த வேண்டும். தி.மு.க., படைபலம், பணபலம் கொட்டத்தை அடக்கவேண்டும் என்றால் தேர்தல் ஆணையம் நடுநிலையாக, நேர்மையாக இருக்க வேண்டும். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top