மதுரை மேலூரில் 4979 ஏக்கர் பரப்பளவில் அமைய இருந்த டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்படும். இதற்கான அறிவிப்பினை மத்திய கனிமம் மற்றும் சுரங்க துறை அமைச்சர் கிஷன் ரெட்டி இந்த மாதம் சென்னை வரும் பொழுது அறிவிப்பார் என தலைவர் அண்ணாமலை பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த அ.வல்லாளப்பட்டி கிராமத்தில் (ஜனவரி 10) தலைவர் அண்ணாமலை டங்ஸ்ன் தொடர்பான விளக்கக் கூட்டத்தில் பங்கேற்றார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.
அப்போது மக்களிடையே தலைவர் அண்ணாமலை கூறுகையில், ‘‘மதுரை மேலூரில் 4979 ஏக்கர் பரப்பளவில் அமைய இருந்த டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்படும். இதற்கான அறிவிப்பினை மத்திய கனிமம் மற்றும் சுரங்க துறை அமைச்சர் கிஷன் ரெட்டி இந்த மாதம் சென்னை வரும் பொழுது அறிவிக்க வாய்ப்புள்ளது.
அதற்கான உறுதியை தமிழக பாஜக அளிக்கிறது. எனவே மக்கள் உடனடியாக டங்ஸ்டனுக்கு எதிரான போராட்டத்தை கைவிட்டு நல்லபடியாக பொங்கலை கொண்டாட வேண்டும்’’, என கோரிக்கையை முன் வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலைவர் அண்ணாமலை, ‘‘மக்கள் டங்ஸ்டனுக்கு எதிராக கடந்த இரு தினத்திற்கு முன்பாக 18 கி.மீ தூரம் நடந்தே அறவழியில் போராட்டத்தை நடத்தி முடித்து இருக்கின்றனர். மேலூர் அரிட்டாப்பட்டி, நாயக்கர்பட்டி, கிடாரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர்.
மத்திய அரசு இந்த பகுதியில் இருக்கும் டங்ஸ்டனை எடுக்க 4,979 ஏக்கர், 20 ஸ்கொயர் கி.மீ பரப்பளவில் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை நடத்தியது. இதனை ஹிந்துஸ்தான் ஜிங் நிறுவனம் ஏலத்தை எடுத்தது.
இந்த ஏலம் தொடர்பாக கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்து போராட்டம் செய்ததால் கனிமவளத்துறை சார்ந்த அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு இது தொடர்பாக டிசம்பர் 12ம் தேதி கடிதம் எழுதினோம். அதன் அடிப்படையில் மத்திய அமைச்சர் இந்தப் பகுதியில் அமையவிருக்கும் டாங்ஸ்டன் திட்டம் வேண்டாம் என முடிவை எடுத்து நிறுத்தி இருந்தது.
ஆனால் கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு விதமான போராட்டம் நடத்தினர். மத்திய அரசு இந்த திட்டத்தை எதற்காக கொண்டு வந்தது. மாநில அரசு ஏன்? இத்திட்டத்தை எதிர்க்க வில்லை, மாநில அரசு எதிர்க்காததால் மத்திய அரசு ஏலத்தை அறிவித்தது. கடந்த பிப்ரவரி 2024-ல் நடந்த முதல் ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை. எனவே, இரண்டாவது முறையாக நடந்த ஏலத்தைதான் இந்துஸ்தான் ஜிங் என்ற நிறுவனம் எடுத்தது. அப்பொழுது இது திட்டம் வேண்டாம் என மக்கள் சொல்லிய பிறகு அரசியலைக் கடந்து கட்சியைக் கடந்து, மாநில அரசு, மத்திய அரசு என்பதை கடந்து மக்களின் கோரிக்கை பிரதானமாக இருந்தது.
எனவே, இதனை மத்திய கனிம சுரங்க துறை அமைச்சருக்கு கவனத்திற்கு எடுத்துச் சென்றோம். இத்திட்டத்தால் மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் கூட வருவாய் கிடைக்காது முழுவதுமாக ஏலத்துக்குப் பிறகு வருவாயை அனுபவிப்பது மாநில அரசு மற்றும் உள்ளூர் பஞ்சாயத்து மட்டுமே. மாநில அரசுதான் பல்வேறு விதமான கிளியரன்ஸை கொடுக்க வேண்டும். அதனை கொடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டோம். அரிட்டாபட்டி பல்லுயிர் தளம் 477 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
அதையும் தாண்டி எங்கேயும் வேண்டாம் என பொதுமக்கள் கூறுகின்றனர் மக்களின் கோரிக்கையை மத்திய அமைச்சரிடம் எடுத்துச் சென்றோம். மத்திய கனிம மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி வருகின்ற ஜனவரி 17, 18 ,19 ஆகிய மூன்று நாட்களில் சென்னை வருகிறார். அப்பொழுது அவரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் அல்லது இந்தப் பகுதியைச் சேர்ந்த 5 பிரதிநிதிகளை டெல்லி அழைத்துச் சென்று சந்திக்க ஏற்பாடு செய்வோம். இந்த பகுதியில் டங்ஸ்டன் திட்டம் வராது என்ற உத்தரவாதத்தை பாரதிய ஜனதா கட்சி சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
சுரங்கத்துறை அமைச்சரே டங்க்சன் திட்டம் வராது என அறிவிக்க இருக்கிறார். நான் இங்கே வந்ததற்கான மிக முக்கிய காரணம் பொங்கல் பண்டிகை வர இருக்கிறது. அதனைக் கொண்டாடுவதை விடுத்து மக்கள் ஒரு பயத்தோடு அச்ச உணர்வோடு இருக்கின்றனர். இதனை மக்களிடம் தெரிவித்து இருக்கிறோம். மக்கள் மகிழ்ச்சியுடன் கலைந்து சென்று இருக்கிறார்கள். மக்கள் அறப்போராட்டத்தில் நியாயமான கோரிக்கையை முன்னிறுத்தி போராடி இருக்கின்றனர். இதனை தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இச்சமயத்தில் மாநில அரசுக்கு இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கின்றேன். ஒன்று அறவழியில் போராட்டம் நடத்தி மதுரை வரை பேரணியாக பொது சொத்துக்கு சேதாரம் இல்லாமல் வந்து, தமுக்கம் மைதானம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போடப்பட்ட வழக்கினை வாபஸ் பெறவேண்டும். அதேபோல் இந்த 20 ஸ்கொயர் கிலோமீட்டர் பரப்பளவில் சொத்தை வாங்க, விற்க முடியாத அளவிற்கு ஈசியை மாநில அரசு பிளாக் செய்து வைத்திருந்தது. அதனை தற்பொழுது நீக்கி உள்ளது. எனவே இனிமேல் மக்கள் இந்த பகுதிக்குள் இடத்தை வாங்க விற்க முடியும்.
அதேபோல் இனிவரும் காலங்களில் ஒரு திட்டம் குறித்து மத்திய அரசு கேட்கிறது என்றால் மாநில அரசு முறையான பதில் கடிதம் வழங்க வேண்டும். இதுபோன்ற ஒரு குழப்பம் மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது. பிரச்சனைக்குரிய இடமாக இருக்கும் பொழுது மக்களை அழைத்துப் பேசி கிராம சபை கூட்டம் நடத்தி அது குறித்த சரியான தகவலை மத்திய அரசிடம் அனுப்பினால் ஏலம் என்ற இடத்திற்கே அது செல்லாது. பிரச்சனைக்குரிய இடமாக இருக்கும் பட்சத்தில் அதனை அப்பகுதி மக்களிடம் கலந்து ஆலோசனை செய்து முறைப்படி செயல்படுத்த வேண்டும் என கோரிக்கையையும் முன் வைக்கிறோம். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார். இப்பேட்டியின் போது பாஜக நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.