சென்னை ஈ.சி.ஆரில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அங்கு காரில் பெண்களை துரத்திய சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது என்பதற்கு ஈசிஆர் சம்பவம் ஓர் உதாரணம் என தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காரில் சென்று கொண்டிருந்த பெண்களை, திமுக கொடி பொருத்தப்பட்ட வேறொரு காரில் பின் தொடர்ந்த சில போதை ஆசாமிகள் அவர்களை வழிமறிக்க முயல்வதையும், மூர்க்கத்தனமாக அப்பெண்களை மீண்டும், மீண்டும் துரத்துவதையும், அப்பெண்கள் உயிர் பயத்தில் பதறும் வீடியோ காட்சிகளையும் காண்கையில் நமது நெஞ்சம் பதைபதைக்கிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் குற்றவாளிகளை கைது செய்யாமல் புகார் கொடுத்த பெண்களின் விவரங்களை வெளியிட்டது திராவிட மாடல் அரசு. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக மாணவி விஷயத்திலும் இதே நிலையைத்தான் திராவிட மாடல் அரசு எடுத்திருந்தது.
இந்தநிலையில், சென்னையில் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் நானும் பார்த்தேன். ஏனென்றால் ஈசிஆர் பகுதியில் தான் வசித்து வருகின்றேன். பெண்கள், இளைஞர்கள் என எப்போதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமாக செல்கிறார்கள். ஆனால் நாம் பார்க்கும் போதெல்லாம், அங்கு போலீஸ் பாதுகாப்பு குறைவாகத்தான் இருக்கிறது.
சரியான பாதுகாப்பு அங்கே இருக்காது. அதிகாலை, நள்ளிரவு நேரங்களில் அங்கு சரியான பாதுகாப்பு இருக்காது. இன்றைக்கு திமுக கட்சியின் கொடி போட்டிருந்த காரில் வந்தவர்கள், அந்த பெண்களிடம் மிக மோசமாக நடந்துக்கொள்ளக் கூடிய வீடியோ.. இதை எல்லாரும் பார்த்து இருப்பீங்க. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கு பல உதாரணங்கள் பார்த்து இருப்போம். இருந்தாலும் கூட தினமும் ஒரு உதாரணங்கள் புதுசு புதுசாக வந்துகொண்டிருக்கின்றன.
நாட்டில் பெண் ஒருவர் சுதந்திரமாக என்றைக்கு நடந்து செல்கிறார்களோ அன்றைக்கு முழு சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம். இந்தியா முழுவதும் சுதந்திரம் கிடைத்துவிட்டதாக நினைக்கிறேன். ஆனால் தமிழகத்திற்கு மட்டும் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை. ஏனென்றால் நள்ளிரவில் பெண்கள் சென்றால் பிரச்சினை. பகலில் சென்றாலும் பிரச்சினை. அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்திலும் அங்கு படிக்கக் கூடிய பெண்களுக்கு பிரச்சினை.
இரவு 7 மணியை தாண்டினாலும் பிரச்சினை. எல்லா நேரத்திலும்கூட தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தினமும் நிரூபணம் ஆகிக்கொண்டு இருக்கிறது. இதற்கு இன்னொரு சான்றாக தான் ஈசிஆர் சம்பவம். திமுக அரசிடம் சொல்வது என்னவென்றால், காவல்துறைக்கு ரோந்து வாகனம் வாங்கி கொடுங்க. காவல்துறைக்கு எந்தவித உபகரணங்கள் கொடுக்காமல், வேலைக்கு ஆட்கள் எடுக்காமல், காவல் நிலையங்களை அதிகப்படுத்தாமல், கையாலாகாத திராவிட மாடல் என்று சொல்லும் திமுக அரசு, பெண்களுக்கு எதிராக நடக்கின்ற அட்டூழியங்களை அடக்குவதற்கு ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடாமல் இருக்கிறார்கள். இதனை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை முதல்வர் ஸ்டாலின் நினைத்து பார்க்க வேண்டும். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார்.