முருக பக்தர்கள் மீது கை வைப்பதா? சேகர்பாபு, ரகுபதியை எச்சரித்த தலைவர் அண்ணாமலை

திருப்பரங்குன்றம் விஷயத்தில் முருக பக்தர்கள் மீது கை வைப்பதா என்று அமைச்சர்கள் சேகர்பாபு, ரகுபதிக்கு தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை செய்தார்.

திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலையை காக்க வேண்டும் என்று நேற்று மதுரை பழங்காநத்தம் பகுதியில் பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதுகுறித்து திமுக அமைச்சர் சேகர்பாபு, மதுரையில் குவிந்தவர்கள் இந்து அமைப்பினர் என்று சொல்லக் கூடாது. அவர்கள் பாஜகவினர் தான் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் தலைவர் அண்ணாமலை பேசுகையில், அமைச்சர் சேகர்பாபுவுக்கு சில விஷயங்களை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். திருப்பரங்குன்றம் சரித்திரம் சேகர்பாபுவுக்கு தெரியுமா? 1926ல் இதே பிரச்சனை வந்த போது, திருப்பரங்குன்றத்தை பொறுத்தவரை முழுமையாக கோயிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது மேல்முறையீடு சென்ற போது, இருவரும் சமாதானமாக செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 1931ல், சப் ஆர்டினேட் நீதிபதி கொடுத்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். முழுமையாக கோயிலுக்கு சொந்தம் என்று தீர்ப்பு வந்த பின், பிரச்சனை முடிந்துவிட்டது. ஆங்கிலேயர்கள் இந்து மக்களுக்காக காத்த கோயிலை, இன்று திராவிட கும்பல் குறிப்பாக திமுக கொடுப்பதற்கு தயாராக இருப்பது வேடிக்கையாக உள்ளது.

இதனால் சேகர்பாபு பேசுவதற்கு முன்பாக 1931 ப்ரிவி கவுன்சில் தீர்ப்பை படிக்க வேண்டும். இன்று புதிதாக இன்னொரு மதத்தைச் சார்ந்தவர்கள் பிரச்சனையை தொடங்குகிறார்கள். அங்கு சென்று சாப்பிடுகிறார்கள். எம்பி நவாஸ் கனி மீது நடவடிக்கை எடுக்க துப்பில்லை. ஆனால் சேகர்பாபு வீரவசனம் பேசிக் கொண்டிருக்கிறார். அமைச்சர் ரகுபதி, இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்கிறார்.

பெண்களிடம் தவறு செய்பவர்களை பிடிக்காமல், நேற்றிரவு பாஜகவினர் பலரையும் வீட்டிற்கு சென்று கைது செய்திருக்கிறார்கள். மதுரை நீதிமன்றத்தில் தீர்ப்பளித்த ஒரு மணி நேரத்தில் மக்கள் வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார்கள். அதேபோல் இஸ்லாமியர்கள் சகோதரர்களாக இருந்தாலும், இந்த விவகாரத்தில் பிரச்சனையை தொடங்கியவர் யார்?

இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று சீன் போட்டு சுற்றினால், உங்களை எப்படி அடக்க வேண்டும் என்பதும் எங்களுக்கு தெரியும். அமைச்சர் ரகுபதி வார்த்தையை சரியாக பயன்படுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதியாக இருக்கிறீர்கள் என்பதற்காக மட்டுமே மரியாதை கொடுக்கிறோம். அந்த மரியாதையை தற்காத்து வார்த்தையை பயன்படுத்துங்கள்.

முருக பக்தர்கள் மீது கை வைத்தால் நீங்கள் இருக்க மாட்டீர்கள். இன்னொரு முறை இரும்புக்கரம் என்ற வார்த்தையை பயன்படுத்தினால், ரகுபதி இருக்குமிடம் அவருக்கே தெரியாது. தமிழ்நாட்டில் பிரச்சனையை உருவாக்குவது திமுக தான். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top