டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றது சாதாரண வெற்றி அல்ல; வரலாற்று சிறப்புமிக்கது என பாஜக தலைமை அலுவலகத்தில் ஆற்றிய உரையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 48 தொகுதிகளை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. இதனால் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று ( 08.02.2025 ) மாலை புது தில்லி பாஜக தலைமையகத்தில் நடந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை மக்கள் கொடுத்துள்ளனர். சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுத்த மக்களுக்கு எனது வணக்கங்கள்.
தலைசிறந்த தலைநகரை உருவாக்க வேண்டும் என்பதற்காக மக்கள் பாஜகவிற்கு வாக்களித்து உள்ளனர். அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது மக்கள் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளனர். தற்போது ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்து டெல்லி விடுதலை பெற்றுள்ளது.

இந்த வெற்றியில் ஒவ்வொரு பா.ஜ., தொண்டருக்கும் பங்கு உண்டு. அவர்கள் கடுமையாக உழைத்தனர். இரட்டை இன்ஜின் அரசு டெல்லியின் முன்னேற்றத்திற்கு கடினமாக உழைக்கும். இரட்டை இன்ஜின் அரசு மீதான நம்பிக்கையை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
டெல்லி இனிமேல் இரட்டை வேகத்தில் முன்னேறும். மக்கள் எங்களுக்கு அளித்த அன்பை இரண்டு மடங்காக திருப்பித் தருவோம். ஷார்ட்கட் அரசியல், ஷார்ட் சர்க்யூட் ஆகி விட்டது. நாடாளுமன்ற தேர்தலில் டெல்லி மக்கள் என்னை எப்போதும் ஏமாற்றியது இல்லை. கடந்த 3 தேர்தல்களிலும் 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது.
நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு, ஹரியானா மற்றும் மஹாராஷ்டிராவில் சாதனை படைத்து இருந்தோம். தற்போது டெல்லியிலும் சாதனை படைத்து விட்டோம். டெல்லி என்பது சாதாரண நகரம் அல்ல. அது மினி இந்தியா. இனிமேல் டெல்லி இளைஞர்கள் சிறந்த நிர்வாகத்தை உணர்வார்கள்.
பன்முகத்தன்மை வாய்ந்த டெல்லி இந்த வெற்றி மூலம் பாஜகவிற்கு ஆசி வழங்கி உள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின் அராஜகம் மற்றும் அகங்காரத்திற்கு மக்கள் முடிவு கட்டி உள்ளனர்.
நானும் பூர்வாஞ்சல் பகுதியில் இருந்து எம்.பி., ஆக தேர்வு செய்யப்பட்டவன் எனப் பெருமையுடன் கூறிக் கொள்கிறேன். இப்பகுதி மக்கள் பாஜகவிற்கு ஆதரவு அளித்து உள்ளனர். டெல்லியில் ஒவ்வொரு மூலையிலும் தாமரை மலர்ந்துள்ளது.
இது சாதாரண வெற்றி அல்ல. மோடியின் வாக்குறுதி மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு தலைவணங்குகிறேன். அனைத்து தரப்பு மக்களும் பாஜகவிற்கு ஆதரவு அளித்து உள்ளனர். என்றும் மக்களுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம்.
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் மாநிலங்கள், வளர்ச்சியில் உச்சம் பெற்றுள்ளன. டெல்லியில் கிடைத்த வெற்றி என்பது கொள்கை, வளர்ச்சி, நம்பிக்கைக்கானது. ஊழலுக்கும், அரசியலில் பொய்க்கும் இடமில்லை என்பதை மக்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

வளர்ச்சிக்கு இடையூறாக இருந்த மிகப்பெரிய தடையை அகற்றி உள்ளீர்கள். ஆம் ஆத்மி அரசு டெல்லி மெட்ரோ பணிகளை தடுத்தது. ஆயுஷ்மான் பாரத் பலன்கள் மக்களை சென்றடைவதை தடுத்தது.
நிர்வாகம் என்பது நாடகத்திற்கான மேடை அல்ல. டெல்லியில் முன்னேற்றத்திற்காக உழைப்போம். தேசிய ஜனநாயக கூட்டணி எங்கு எல்லாம் உள்ளதோ அங்கு எல்லாம் வளர்ச்சி, நம்பிக்கை, சிறந்த நிர்வாகம் இருக்கும் என்பதை ஒட்டு மொத்த நாடும் அறியும்.
இந்தியாவில் பல மாநிலங்களில் பாஜக ஆட்சிகள் மீண்டும் தேர்வு செய்யப்படுகின்றன. இதற்கு பாஜக செய்த வளர்ச்சி பணிகள் மட்டுமே காரணம். மோடியின் வாக்குறுதிகள் என்பது வளர்ச்சிக்கானது. நடுத்தர மக்கள், ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.