புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி மொழி கட்டாயப்படுத்தவில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன்

புதிய கல்விக் கொள்கையில், இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை மூன்றாவது மொழியாக வைத்துக் கொள்ளுங்கள்; ஹிந்தி மொழியை தான் ஏற்க வேண்டும் என நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 22) மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை, அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.

வேளாண்மை, தொழில் வளம், கல்வி, விஞ்ஞானம் என பல துறைகளுக்கும் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு, தமிழக வளர்ச்சிக்கு மட்டும் ரூ.11 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் இரட்டை என்ஜின் ஆட்சி இருந்தால் மாநிலம் வளர்ச்சி அடையும். அந்த வகையில், டெல்லி தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு ஆட்சி செய்யும் வாய்ப்பை வழங்கி உள்ளனர்.

தமிழகத்திலும் அவ்வாறான ஆட்சி மாற்றம் வரவேண்டும். மும்மொழிக் கொள்கை பொறுத்தவரையில், ஹிந்தி மொழியை தான் சேர்க்க வேண்டும் என நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. மூன்றாவது மொழியாக எந்த மொழியை வேண்டுமானாலும் மாணவர்கள் எடுத்து படிக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்தர பிரதான், தமிழக அரசுக்கு விளக்கமாக எழுதிய கடிதத்தில், இவ்வாறான கொள்கைகளை ஏற்றால் மட்டுமே கல்விக்கான நிதி ஒதுக்கீடு செய்வதற்கான முயற்சியை எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு மீது தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வேண்டுமென்றே தவறான தகவல்களை கூறி வருகின்றனர். 2026 சட்டப்பேரவை தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற வேண்டும். கட்சியினர் அனைவரும் இதற்காக பாடுபட வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

இந்த நிகழ்வின்போது பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம், தேசிய பொது குழு  உறுப்பினர் மனோகரன், மாவட்ட தலைவர்கள் கிழக்கு நேஷனல் சரவணன், மேற்கு ராஜேஷ் குமார், முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மற்றும் ஒரே நாடு சேலம் பெருங்கோட்டம் பொறுப்பாளர் பிரணவகுமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top