ஒவ்வொரு பாரதிய ஜனதா கட்சி தொண்டரும் திமுக ஆட்சியை வேறோடு பிடுங்கி எறியத் தயாராகி விட்டார்கள் என்று கோவை மாவட்ட பாஜக புதிய அலுவலக திறப்பு விழாவில் தலைவர் அண்ணாமலை பேசினார்.
கோவை மாவட்ட பாஜக அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் தலைவர் அண்ணாமலை உரையாற்றியதாவது: நமது புதிய இல்லம், நமது கோவிலை திறப்பதற்காக வந்திருக்கக்கூடிய நமது அன்பை எல்லாம் பெற்றிருக்கக்கூடிய மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே, மேடையில் இருக்கக்கூடிய எல்லாத்தலைவர்களும், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், சட்டப்பேரவை குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, முன்னாள் மாநிலத் தலைவராக இருந்து ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து இன்றும் அதே வேகத்தோடு வழிநடத்திக் கொண்டிருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும தர்மப்போராளி ஹெச்.ராஜா, முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மகளிர் அணியின் தேசிய தலைவி வானதி சீனிவாசன், மாநிலத்துணைத்தலைவர்கள் கனகசபாபதி, சக்கரவர்த்தி, மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் கோவை மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், ரத்தம் சிந்தி கட்சி வளர்த்த மறைந்த முன்னாள் மாவட்ட தலைவர் ஐயா வாசுதேவராவ், அவரது மகன் பிரமோதரராவ் தற்போது வந்துள்ளார். முன்னாள் மறைந்த மாவட்ட தலைவர்கள் கே.எஸ்.நடராஜன், பூபதி உள்ளிட்ட அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைக்கு நமது தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். முன்னாள் தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா அவர்கள் பேசும்போது நமக்கு ஒவ்வொரு மாவட்டங்களிலும் அலுவலகம் இருக்க வேண்டும். அனைத்து மக்களும் நமது கோவிலான அலுவலகத்துக்கு உரிமையோடு வர வேண்டும். அப்படிப்பட்ட கட்டிடம் இருக்க வேண்டும் என்றார்.
இன்றைக்கு நமது கட்டிடத்தை பார்த்தோம் ஆனால் மாவட்ட தலைவரில் இருந்து எல்லோருக்கும் தேவையான அறை மற்றும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று நமது அலுவலகங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் திறந்து வைக்கிறார். எனவே அனைவரின் சார்பாக அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று நாம் வேகமாக வளர வேண்டும். நாம் வேகமாக வளர்வதால்தான் நம் மீது கல்லை வீசுகின்றனர். பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி தமிழகத்தில் உள்ள மக்களின் மனதில் தங்க ஆரம்பித்து விட்டது. எல்லோருடைய இல்லங்களிலும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குடியிருக்கிறார். எதிர்க்கட்சி நண்பர்களால் மக்களிடையே போக முடியவில்லை, பேச முடியவில்லை. அவர்களின் எந்த ஒரு திட்டமும் கூட மக்களிடையே போக முடியவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கஷ்டப்பட்டு சிந்திச்சு ஒரு நடுத்தர மக்கள் வாங்கக்கூடிய மருந்தின் விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக பிரதம மந்திரி மருந்தகத்தை நாடு முழுவதும் திறந்து வைத்தார். ஆனால் தமிழகத்தில் இருக்கக்கூடிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அத்திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டார். அப்படி ஒரு திட்டம் வந்தால் அதற்கும் தடை விதிப்பார். ஆனால் ஸ்டாலின் அவர்கள் பிரதம மருந்தகத்தை காப்பி அடிச்சு முதல்வர் மருந்தகம் என்று தொடங்கி வைத்துள்ளார். இதுபோன்ற அநியாயத்தை எங்கேயாவது பார்த்திருப்பீர்களா? நாங்கள் செய்தால் அது குற்றம்? நாங்கள் செய்தால் அதனை மக்களிடம் செல்வதற்கு விட மாட்டீர்கள். அதே பெயரை எடுத்து ஸ்டாலின் பெயரில் வைப்பது எங்களுக்கு சந்தோஷம்தான். உங்கள் பெயரில் ஆவது பிரதமரின் திட்டம் போய் சேர்வது மகிழ்ச்சியே. எங்களை பொறுத்தவரையில் நடுத்தர மக்களுக்கு மருந்துகள் போய் சேரவேண்டும்.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது பெயரை வைத்து திட்டத்தை தொடங்கவில்லை. மாறாக பிரதமர் மருந்தகம் என்றுதான் தொடங்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்து தலைவர்களின் பெயரை வைக்காமல் பாரதப் பிரதமர் திட்டம் என்று வந்தபிறகுதான் தமிழகத்தில் ஈவெரா மற்றும் அண்ணா பெயர் குறைந்து முதல்வர் திட்டம் என்ற பெயர் வெளியே வருகிறது.
தமிழகத்தில் கலைஞர் நூலம் என்று பெயர் வைக்கிறவங்க மருந்தகத்திற்கு முதல்வர் மருந்தகம் என்று பெயர் வைத்துள்ளதை பார்த்தால் நாம் ஜெயித்துவிட்டோம் அன்பு சொந்தங்களே. அதை எல்லாம் செய்திருப்பவர் ஒப்பற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்தான். எனவே இன்று நாம் கடுமையாக பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். அதற்கான பரிசு பாஜக தொண்டன் ஏதோ ஒரு இடத்தில் கைது செய்யப்படுகிறான். அந்த கைதுக்கூட இன்முகத்தோடு தொண்டர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். நேற்று ஒருவர் சிறையில் இருந்த வந்தபின்னர் தொலைபேசியில் பேசினேன். அப்போது எப்படி இருக்கீங்க அண்ணே என்றேன். அதற்கு தொண்டர் எந்த பிரச்சனையும் இல்லை நான் சிறைக்கு செல்வதற்கு முன்பாகவே வீட்டிற்கு தேவையான பொருட்கள் மற்றும் பணத்தை கொடுத்துவிட்டேன் என்றார்.
ஒவ்வொரு பாரதிய ஜனதா கட்சி தொண்டரும் திமுக ஆட்சியை வேறோடு பிடுங்கி எறியத் தயாராகி விட்டார்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது. இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் பட்டப்பகலில் கபடம் நாடகம் போடுகிறார். நாம் இந்தியை திணிக்கிறோம் என்று, இப்போதான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காசியில் தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சி மூன்றாவது முறையாக நடைபெற்றது. இதனை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நடத்தியுள்ளார்.
சிங்கப்பூரில் திருவள்ளூர் கலாச்சார அரங்கத்தை பிரதமர் திறந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை பிரதமர் ஏற்படுத்தியுள்ளார். தமிழை நேசிக்கக்கூடிய ஒரு பிரதமராக நரேந்திர மோடி இருக்கிறார் என்பது ஒவ்வொரு நாளுக்கான சாட்சி ஆகும்.
நவம்பர் 12, 2022ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு அறிவுரை வழங்கினார். இந்தியாவில் மருத்துவக்கல்வியில் இருந்து தொழில்நுட்பக்கல்வி அனைத்தையும் சொந்த தாய்மொழியில் சொல்லிக்கொடுங்கள் ஸ்டாலின் அவர்களே என உள்துறை அமைச்சர் கூறினார். ஆனால் எப்படி அமித்ஷா அவர்கள் இந்தியை திணிப்பார்கள். இதற்கு முன்னர் மத்திய போலீஸ் தேர்வு இந்தி, ஆங்கிலம் மொழியில் இருந்தது. ஆனால் அதனை மாற்றி 13 பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதுவதற்கு அமித்ஷா அவர்கள் உத்தரவிட்டார். எனவே ஸ்டாலின் பேசும் பொய்யை இனிமேல் மக்கள் நம்பத்தயாராக இல்லை. இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார்.