மும்மொழிக் கல்விக்கு ஆதரவாக பாஜக சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம்

மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு மக்களிடம் ஆதரவு திரட்டும் பொருட்டு ஒரு கோடி பேரிடம் கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி இன்று (மார்ச் 05) தொடங்கியது.

சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் கையெழுத்து இயக்கத்துடன் ‘சமக்கல்வி – எங்கள் உரிமை’ என்கிற இணையத்தளத்தையும் தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பாஜக மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, தமிழிசை செளந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில துணைத் தலைவர்கள், பாஜக நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தர்மப்போராளி ஹெச்.ராஜா, மூத்த துணைத் தலைவர்கள் கே.பி.ராமலிங்கம், டால்ஃபின் ஸ்ரீதர், நாராயணன் திருப்பதி, சக்கரவர்த்தி, மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் மற்றும் மாவட்டத்தலைவர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

1965ல் காங்கிரஸ் செய்த மாபெரும் தவறு இந்தியை திணித்தது. அது 1967ல் திமுக ஆட்சிக்கு வழி வகுத்தது. 1965ல் தொடங்கிய இந்தி திணிப்பு 2020 மே 31ஆம் தேதி வரை நமது பாரத நாட்டில் தொடர்ந்து இருந்தது. மூன்றாவது மொழி கட்டாயமாக இந்தி படிக்க வேண்டும் என்பது இருந்தது.

மே 31, 2020ல் புதிய தேசிய கல்விக்கொள்கை வெளியே வந்தது. அன்றிலிருந்து நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மூன்றாவது மொழி என்பது கட்டாய இந்தி கிடையாது. விருப்பமொழியாக நாட்டில் உள்ள ஏதாவது ஒரு மொழியை எடுத்து படிக்க வேண்டும் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஐயா கொண்டு வந்திருக்கிறார்.

இந்திய அரசியல் கல்வித்துறையில் புதிய தேசிய கல்விக்கொள்கை மாபெரும் புரட்சி ஆகும். ஆனால் சில அரசியல் கட்சிகளின் தலைவர்களை பார்க்கும்போது அவர்கள் இன்னும் 1965 பழைய பஞ்சாங்கத்தை படித்துக்கொண்டிருக்கின்றனர். எல்லா அரசியல் தலைவர்களுக்கும் அன்பான வேண்டுகோள். 2020 மோடி பஞ்சாங்கத்தை படிச்சிப் பாருங்கள். அதில் மூன்றாவது மொழி என்பது இந்தி திணிப்பு இல்லை. ஏதாவது ஒரு இந்திய மொழியை படிக்க வேண்டும் என்பதுதான் மோடி பஞ்சாங்கம் சொல்கிறது.

தமிழக மக்களின் எண்ண உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு இந்த நிகழ்வு. பாரதிய ஜனதா கட்சி ஒரு மக்கள் இயக்கமாக பட்டித்தொட்டி எல்லாம் எடுத்துச்சென்று கையெழுத்து வாங்க வேண்டும் என்பதுதான்.

மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பது குறித்து ஒரு கோடி கையெழுத்து பெற்று ஜனாதிபதியை சந்தித்து தமிழக மக்களின் குரலாக கொடுக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். இன்றைக்கு  தமிழகத்தில் இரண்டு சமுதாயத்தை உண்டாக்கும் கல்விக் கொள்கை இருக்கிறது. ஒரு சமுதாயம் ஆங்கிலம் உள்ளிட்ட பெரிய, பெரிய பள்ளியான சிபிஎஸ்இயில் படிக்கின்றனர். அதில் பலர் மூன்று மொழிகளை படிக்கின்றனர்.

இன்னொரு சமுதாயமான 52 லட்சம் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். அவர்களுக்கு மூன்றாவது மொழியை கற்பதற்கான வாய்ப்பே இல்லை. அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எந்த ஒரு அரசியல் தலைவரும், ஆளுகின்ற கட்சியும் தயாராக இல்லை. அதுதான் அரசுப்பள்ளி மாணவர்களின் சாபக்கேடாக உள்ளது. மூன்றாவது மொழியை படிக்க விடமாட்டோம் என திமுக அரசு கங்கனம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது.

அரசுப்பள்ளிகளின் குரலும் நமது மன்றத்தில் ஒலிக்க வேண்டும். அவர்களின் தாய், தந்தை  நினைப்பதையும் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் சமக்கல்வி எங்கள் உரிமை என்கின்ற ஒரு முழக்கத்தை பாரதிய ஜனதா கட்சி எடுத்துச்செல்கிறது.

எந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தாலும் சரி சமமான கல்வி இருக்க வேண்டும். இன்று தமிழகத்தில் நாம் பார்க்கிறோம். அரச மரத்தடியில் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. பெரிய பெரிய பள்ளிகளில் 5 முதல் 6 லட்சம் வரை பணம் கொடுத்து படிக்கும் குழந்தைகளையும் பார்க்கிறோம். எனவே எல்லோருக்கும் சமமான கல்விக்கொள்கையை வழங்க வேண்டும் என தேசிய கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது.
எனவே இது மிகப்பெரிய புரட்சிகரமான கையெழுத்து இயக்கம் என்பது என்னுடைய கருத்து. இங்கு உள்ள அன்புத் தொண்டர்கள், தலைவர்களின் கருத்தும் அதுதான். காரணம், தமிழகத்தின் அரசியலை மாற்றக்கூடிய வலிமை சமக்கல்வி கையெழுத்து இயக்கத்திற்கு உள்ளது.

நமது முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு இந்தியை திணிக்கிறது என தொடர்ந்து பேசுவதை பார்க்கிறோம். முகநூல் பதிவில், சமஸ்கிருதத்திற்கு அதிகளவு நிதி ஒதுக்கப்படுகிறது, தமிழுக்கு ஒதுக்கப்படும் நிதியை பாருங்க என தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து மக்களை தவறான திசையில் அழைத்துச்செல்வது வருத்தம் அளிக்கக்கூடிய செயலாக உள்ளது.

இந்தியாவில் 200௪ முதல் 2014வரை காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் திமுக அங்கம் வகித்தது. அந்தக் காலக்கட்டத்தில் சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்ட நிதி மட்டுமே 675 கோடி ரூபாய் ஆகும். அப்போது தமிழுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 75 கோடி ரூபாய் ஆகும். நாம் ஆட்சியில் இல்லை. ஆட்சியில் இருந்த காங்கிரசுடன் அங்கம் வகித்தது திமுக.

சமஸ்கிருதத்திற்கு மொத்தமாக இந்தியாவிலேயே 18 பல்கலைக்கழகம் உள்ளது. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே 17 பல்கலைக்கழகத்தை காங்கிரஸ் ஆரம்பித்து விட்டது. 2014க்கு பின்பு ஒரு பல்கலைக்கழகம் என மொத்தம் 18 பல்கலைக்கழகம் உள்ளன.

நமது தாய் தமிழுக்கு ஒரே ஒரு பல்கலைக்கழகம் அதுவும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆரம்பித்தது. நாங்கள் யாருமே பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க வேண்டாம் என தமிழக அரசிடம் கூறவில்லை. சமஸ்கிருத மொழிக்கு 18 பல்கலைக்கழகம் இருக்கிறது. தாய் தமிழ் மொழிக்கு ஒரு பல்கலைக்கழகம் உள்ளது. ஆனால் இதனை முகநூலில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டு ஏன்? தமிழுக்கு நிதி வழங்கவில்லை எனக் கேட்கிறார். ஆட்சியை நடத்தியது காங்கிரஸ், ஆட்சியில் இருந்தது திமுக. அன்றைக்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் இந்தியை வளர்ப்பதற்காக 170 பரிந்துரைகளை வழங்கினார். அதுப்பற்றி திமுக கேள்வி கேட்க வேண்டும்.

ஆனால் மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ் கலாச்சாரம், மொழிக்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கி, செங்கோல் பாராளுமன்றத்தில் வைத்தது, திருவள்ளுவரின் கலாச்சார மையம், மகாகவி சுப்பிரமணிய பாரதி இருக்கையில் இருந்து சிங்கப்பூரில் தமிழ் பல்கலைக்கழகத்தில் இருக்கை அளித்து இவ்வளவு வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.

அதனால் சமக்கல்வி கையெழுத்து இயக்கம் எல்லா பொய் பிரச்சாரங்களை உடைத்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஐயாவின் சிந்தனையை ஏழை, எளியோர்களின் வீட்டிற்கு எடுத்துச்செல்ல வேண்டும். அந்த குழந்தைகளுக்கு நல்ல சமக்கல்வி ஒரு உரிமையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. பாஜக தொண்டர்கள் இதனை எடுத்துச்செல்ல வேண்டும். நீங்கள் வாங்கக்கூடிய ஒவ்வொரு கையெழுத்தும் தமிழக அரசியலை மாற்றும். கல்வித்தகுதியை மாற்றும். 1965 எப்படி திமுகவிற்கு கிடைத்ததோ, அதே போல 2025 பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு மாற்றம் கிடைக்கும் என்பதையும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும் என்பதையும் பெருமையாக, கம்பீரமாக தெரிவித்துக்கொள்கிறேன். வந்திருக்கும் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top