வரும் மார்ச் 31ம் தேதி உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் இருந்து மக்களவை தேர்தல் பிரசாரத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்குகிறார்.
வரும் மக்களவை தேர்தலில் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மோடியை மூன்றாவது முறையாக பிரதமர் ஆக்க வேண்டும் என பாஜகவினர் இரவு, பகலாக கடுமையாக உழைத்து வருகின்றனர். முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்தது. வரும் 30ம் தேதி வேட்பு மனுவை திரும்பப்பெற கடைசி நாளாகும். இதுவரை ஐந்து கட்டமாக வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தேசிய தலைமை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 31ம் தேதி உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார். அதனைத் தொடர்ந்து முதல் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். கடந்த மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் 64 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை அம்மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் பாஜக வெற்றிப்பெறும் என்று ஏற்கனவே கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளது.