பத்தாண்டுகால பாஜக ஆட்சியில் தினமும் ஒரு சாதனையைப் படைத்து வந்துள்ளத பாஜக . பாம்பாட்டிகள் நகரம் என்று வெளிநாட்டவர்கள் இந்தியாவை வர்ணித்தார்கள். ஆனால் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த பின் அந்த நிலை மாறிவிட்டது. வெளிநாட்டினர் இந்தியாவை வியந்து பார்க்கும் நாடாக மாற்றியிருக்கிறது பாஜக அரசு என நெல்லை வேட்பாளரும், மாநில துணைத்தலைவருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: நம் அண்டை நாடான பாகிஸ்தானை சர்வதேச நாடுகள் தீவிரவாத நாடு என்று ஓரம்கட்டுவதற்குப் பின்னணியில் இருப்பவர் மோடி. காங்கிரஸ் ஆட்சியில் சீனா பற்றி வாயே திறக்கமாட்டார்கள். ஆனால் கல்வான் பள்ளத்தாக்கில் நம் இந்திய வீரர்கள், சீன வீரர்களை கையாலேயே அடித்துக் கொன்று சாதனை படைத்ததை மறக்க முடியுமா?
காஷ்மீரில் ராணுவத்தின் மீது தினமும் மக்கள் கற்களை எறிவார்கள், தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடுவார்கள். ஆனால் பாஜக பொறுப்பேற்ற பின் அவர்களைக் காணோம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370ஐ நீக்கும் ‘தில்’ பாஜகவுக்குத்தான் இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் பல இடங்களில் அடிக்கடி குண்டுகள் வெடித்ததே.. பாஜக பொறுப்பேற்ற பின்னர் குண்டுகள் வெடித்ததா? உள்ளூர் தீவிரவாதம் அடியோடு நசுக்கப்பட்டுவிட்டது.
கொரோனாவை உலக நாடுகள் கட்டுப்படுத்த தவறிய நிலையில் பிரதமர் அதை திறமையாக சமாளித்ததோடு, நூற்றுக்கும் அதிகமான நாடுகளுக்கு தடுப்பு மருந்துகளை இலவசமாக அனுப்பி வைத்து உலகை வியக்க வைத்தார். டிஜிட்டல் மயம், தொழில்துறை, சுகாதாரத்துறை ஆகியவை அமோக வளர்ச்சி கண்டிருக்கின்றன.
காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல் என்று ஊழல் பற்றிய செய்திகள்தான் அதிகம் வரும். கடந்த 10 ஆண்டுகளில் ஊழல் ஒழிக்கப்பட்டுவிட்டது. பாஜக அமைச்சர்கள் ஊழல் செய்தார்கள் என்று செய்திகள் வருகிறதா? ஊழல் இல்லாத தீவிரவாதம் இல்லாத இந்தியா வளர்ச்சிப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி ஒரு வல்லரசாக மாறி வருகிறது மோடி ஆட்சியில். எனவே மறுபடியும் பாஜக ஆட்சிதான் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.