இந்தியாவின் பகுதியாக இருந்த கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த காங்கிரஸ் மற்றும் திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக கச்சத்தீவை, இலங்கைக்கு இந்தியா 1976ம் ஆண்டு தாரை வார்த்தது தெரியவந்துள்ளது. இதைப்பற்றிய முழு விபரம் 1974ம் ஆண்டு ஜூன் மாதமே, அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வரை கச்சத்தீவு பற்றி உண்மைக்கு புறம்பாக பிரசாரம் மேற்கொள்ளும் தி.மு.க., அரசு, இதற்கு பதிலளிக்க வேண்டும். கச்சத்தீவை, காங்கிரசுடன் சேர்ந்து தாரை வார்த்துவிட்டு, தி.மு.க.,வினர் பிறரை கேள்வி கேட்கும் போக்கு மிகவும் தவறானது.
50 ஆண்டுகளாக தி.மு.க.,வினர் செய்து வரும் உண்மைக்கு புறம்பான பிரசாரத்தின் சாயம், இதன் வாயிலாக வெளுத்துள்ளது. நம் நாட்டின் ஒரு பகுதியை தாரை வார்த்த அதே கூட்டம் இன்று இ.ண்.டி. கூட்டணியின் வாயிலாக வடக்கு, தெற்கு என பிரிவினைவாதம் பேசுகிறது.
எனவே, கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க., தன் உண்மைக்கு புறம்பான பிரசாரத்தை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.