கச்சத்தீவு விவகாரம் குறித்து கடந்தகால வரலாற்றை சுட்டிக்காட்டி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 1974ம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய மீனவர்களின் உரிமைகள் தொடர்பாக 1974ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. கடந்த 1974ல் ஒப்பந்தம் கையெழுத்தான போது இந்திய மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 1976ல் இருநாடுகளுக்கு இடையே கையெழுத்தான மற்றொரு ஒப்பந்தத்தில் மீனவர்களின் உரிமை மறுக்கப்பட்டது.
கச்சத்தீவு, தமிழக மீனவர்கள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எனக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்கு நான் 21 முறை பதில் கடிதம் அனுப்பி உள்ளேன். தங்களுக்கு பொறுப்பு இல்லை என்கிற வகையில் திமுக, காங்கிரசும் பேசுகிறது. கச்சத்தீவு தொடர்பான உண்மைகளை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறைத்தவர்களை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளவே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவுக்கு உரிமை கோரும் ஆவணங்களை ராமநாதபுரம் ராஜா வைத்திருந்தார். நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பலமுறை விவாதித்துள்ளோம். கடந்த 20 ஆண்டுகளில் இந்திய மீனவர்கள் 6,184 பேரை இலங்கை அரசு இதுவரை கைது செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.